செல்வநிலை சான்று வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பேரூர் தாசில்தார் கைது

10



கோவை: செல்வநிலை சான்றிதழ் வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூர் தாசில்தார் ரமேஷ்குமார் மற்றும் கிராம உதவியாளர் சரவணன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

லியாய்சன் நிறுவனத்தின் பழனிசாமி என்பவர், செல்வநிலை சான்றிதழ் கேட்டு கோவை பேரூர் தாலுகா தாசில்தாரிடம் கடந்த ஜூன் 19 ம் தேதியன்று விண்ணப்பித்து இருந்தார்.

இந்த சான்றிதழ் தொடர்பாக தாசில்தாரை சந்தித்து தகவல் பெறும்படி நிறுவனத்தின் மேலாளர் ரஞ்சித்குமாரை அவர் அறிவுறுத்தினார். இதன்படி, கடந்த 15ம் தேதி ரஞ்சித்குமார், பேரூர் தாசில்தார் ரமேஷ்குமாரை, அலுவலகத்தில் சந்தித்து சான்றிதழ் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என ரமேஷ்குமார் கூறினார். பிறகு மீண்டும் கடந்த 21, 24 ஆகிய தேதிகளில் ரஞ்சித்குமாரை தொடர்பு கொண்ட ரமேஷ்குமார், இன்று( ஜூலை 25) லஞ்சப்பணத்தை வழங்கி சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து இருந்தார். இதனையடுத்து, ரமேஷ்குமாரை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் திட்டம் தீட்டினர். அவர்கள் அறிவுரையின்படி ரஞ்சித்குமார், தாசில்தார் அலுவலகத்தில் ரமேஷ்குமாரை சந்தித்தார்.

அப்போது லஞ்சப்பணத்தை, அருகில் நின்றிருந்த கிராம உதவியாளர் சரவணனிடம் கொடுக்குமாறு கூறினார். லஞ்சப்பணத்தை வலதுகையில் வாங்கி தனது வலது பேன்ட் பாக்கெட்டில் சரவணன் வைத்துக் கொண்டார்.


இதனையறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். இதனை பார்த்து லஞ்சம் வாங்கியவர்களுக்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கேயே சரவணக்குமாரின் வலதுகை, வலது பேன்ட் பாக்கெட்டில் பினால்ப்தலீன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் லஞ்சப்பணம் அவரது பாக்கெட்டில் வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரையும், லஞ்சம் வாங்கச்சொன்ன தாசில்தார் ரமேஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement