கை கொடுத்தது பருவமழை: கோவை, திருப்பூரில் நிரம்பிய அணைகள்

1

கோவை: தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய ஆரம்பித்ததன் காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.



கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள பில்லூர் வனப்பகுதியில், 100 அடி உயரத்தில் பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையில், 97 அடிக்கு நீர் மட்டும் உயரும் பொழுது, பாதுகாப்பு நலன் கருதி, அணை நிரம்பியதாக நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்படும். நீலகிரி மாவட்டம், கேரளாவின் வடமேற்கு பகுதி ஆகிய பகுதிகளில் உள்ள, 460 சதுர மையில்கள் பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாகும்.


கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்ததை அடுத்து, கடந்த மே மாதம், 25ம் தேதி பில்லூர் அணை நிரம்பியது. தொடர்ந்து 5 நாட்கள் அணை நிரம்பி வழிந்தது. அதை தொடர்ந்து ஜூன் 15ம் தேதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, மீண்டும் பில்லூர் அணை நிரம்பியது.


இந்நிலையில் இன்று (ஜூலை 25) காலை அணையின் நீர்மட்டம் 85 அடியாக இருந்தது. பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சியில், 78 மில்லி மீட்டரும், அப்பர் பவானியில் 39 மில்லி மீட்டரும், முக்குறுத்தியில், 40 மில்லி மீட்டரும், எமரால்டில், 10 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 3000 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்தது.


நேரம் செல்லச் செல்ல அது 7000 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இரவு,7:30 மணிக்கு முழு கொள்ளளவான, 97 அடியை எட்டி அணை நிரம்பி வழிந்தது. கடந்த இரண்டு மாதத்தில் பில்லூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பி வழிகிறது.


கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, சோலையாறு அணைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள அமராவதி அணையும் இன்று(ஜூலை 25) நிரம்பி விட்டது.


பி.ஏ.பி., பாசனத்தின் முக்கிய அணையாக கருதப்படும் பரம்பிக்குளம் அணையும் நிரம்பிவிட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை கொள்ளளவு 105அடியில் தற்போதைய நிலவரப்படி 99 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. நீர் வரத்து தொடரும் பட்சத்தில் விரைவில் பவானிசாகர் அணை நிரம்பும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement