பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; புள்ளி விவரம் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

27

புதுடில்லி: பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



பீஹார் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர்கள் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வருகிறது. அதன் பணிகள் அனைத்தும் இன்றுடன் நிறைவு பெற்றது.


இந் நிலையில், பீஹாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்த புள்ளி விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.


அதில் உள்ள விவரங்கள் வருமாறு;


65.2 லட்சம் வாக்காளர்களில் 22 லட்சம் பேர் இறந்து விட்டனர். 35 லட்சம் வாக்காளர்கள் பீஹாரை விட்டு நிரந்தரமாக இடம்பெயர்ந்து உள்ளனர்.


7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். 1.2 லட்சம் பேர் இன்னமும் தங்களது படிவங்களை சமர்ப்பிக்கவில்லை.


99.8 சதவீதம் வாக்காளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டு உள்ளனர். 7.9 கோடி வாக்காளர்களில் 7.23 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல்மயம் ஆக்கப்பட்டு உள்ளன.


அவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். வரைவு வாக்காளர்கள் பட்டியல் ஆக.1ல் வெளியிடப்படும்.


ஆக.1 முதல் செப்.1 வரை அடுத்தக்கட்டத்தின் போது பரிந்துரைக்கப்பட்ட படிவங்களை நிரப்பிய பிறகும், பெயர்கள் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கலாம். தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவது தொடர்பாக கட்சிகள் தங்களின் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யலாம்.

Advertisement