தனியார் ஹோட்டலுக்கு சாதகமாக தூண்கள் இடம் மாற்றம்; மேம்பாலத் துாண்களை இடிக்க உத்தரவு!

19

கோவை: கோவை - அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணியில், ஏறு தளம் அமைப்பதற்கான துாண்களை, தனியார் ஹோட்டலுக்கு சாதகமாக, இடம் மாற்றியது தொடர்பான வழக்கில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செயல்பாடுகளை, சென்னை ஐகோர்ட் கண்டித்துள்ளது. இடத்தை மாற்றிக் கட்டப்பட்டுள்ள இரண்டு துாண்களை தரைமட்டமாக இடித்து விட்டு, ஏற்கனவே திட்டமிட்ட இடத்தில் மீண்டும் அமைக்க உத்தரவிட்டுள்ளது.


கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு, ரூ.1,621.30 கோடியில், 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது. விமான நிலையம், ஹோப்ஸ் காலேஜ், நவ இந்தியா, போலீஸ் பயிற்சி மைதானம் முன்பு என, நான்கு இடங்களில் இறங்கு தளங்கள், ஏறு தளங்கள் அமைக்கப்படுகின்றன.


தனியார் ஹோட்டலுக்கு அருகே உள்ள இடத்துக்கு வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு வழித்தடத்தை அடைத்து கான்கிரீட் துாண் எழுப்பப்பட்டு உள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், ஏற்கனவே திட்டமிட்ட இடத்தில் துாண்கள் எழுப்பக்கோரியும், கவிதா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


வழக்கை, நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்து, தீர்ப்பு கூறியுள்ளார். மனுதாரர் தரப்பில், சீனியர் வக்கீல் சண்முக சுந்தரம், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ராமன் ஆகியோர் ஆஜராகினர்.




துாண்கள் இட மாற்றம் இவ்வழக்கில், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலித்தேன். மேம்பாலத்தின் ஏறுதளங்களுக்கான துாண்கள், 30 மீட்டர் இடைவெளியில் அமைப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு உள்ளது.



ஒரிஜினல் வடிவமைப்பில், மனுதாரரின் நிலத்தின் ஓரத்தில், 265ஏ துாண் அமைந்திருக்கிறது. அருகாமையில் உள்ள ஹோட்டல் நுழைவாயில் முன், 266ஏ துாண் அமைந்திருக்கிறது. ஹோட்டல் மையப்பகுதியில், 267ஏ துாண் அமைந்திருந்தது. 268ஏ துாண் அடுத்த நிலத்துக்கு சென்றிருக்கிறது. இந்த நான்கு துாண்கள் ஒவ்வொன்றும் 30 மீட்டர் இடைவெளியில் சீராக அமைக்கப்பட்டிருந்தன.

இப்போது இடத்தை மாற்றி செயல்படுத்த உள்ள திட்டத்தின் படி, 266ஏ துாண் 9 மீட்டர் இடம் மாற்றம் செய்து, மனுதாரர் நிலத்தின் முன்பாகவே அமைத்துள்ளனர். அதனால், இரண்டு துாண்கள் அமைந்துள்ளன.


அதனால், 265ஏ மற்றும், 266ஏ இடையே உள்ள துாரம், 30 மீட்டரில் இருந்து, 21 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. 266ஏ மற்றும் 267ஏ இடையேயான துாரம், 33 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. 267ஏ மற்றும், 268ஏ இடையேயான துாரம் 36 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றத்தின் கவலை பொது நலத்திற்கே. துாண்கள் இடம் மாற்றும்போது, மேம்பாலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


பொய் மூட்டை



கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள தகவல்கள் எந்த ஆதாரத்தோடும் இல்லை. கடிதங்களில் உள்ள காரணங்களை அதிகாரிகள் முற்றிலும் மறைத்துள்ளனர். துாண்கள் நகர்த்தப்பட்டதற்கான செயல் திட்டம் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் முறையீடு செய்ததும், நீதிமன்றம் நிலை அறிக்கை கோரிய பின்பும், முதன்மை பொறியாளரால் ஆய்வு செய்ய உத்தரவு வழங்கியபோதும், குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கேற்ப துாண்கள் நகர்த்தப்பட்டது என்பது தெரிந்திருக்க வேண்டும். அந்த உண்மையை, அறிக்கையில் மாறாகக் காட்டி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் பொய்களின் மூட்டை.

இவ்வழக்கில், துாண்கள் நகர்த்தப்பட்டது முழுமையாக ஒரு தனியார் நலனுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பது தெளிவாகிறது.




துாண்களை இடிக்கணும்! l நுழைவாயில் பாதிக்கும் என்பதால், துாணை சிறிது துாரம் நகர்த்த வேண்டும் என்கிற ஹோட்டல் நிர்வாகத்தின் கோரிக்கை நியாயமானது.

அதற்காக, ஒன்பது மீட்டர் நகர்த்தி, அடுத்தவர் நிலத்துக்கு முன் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. எனவே, மனுதாரரின் இடத்துக்கு முன் எழுப்பியுள்ள துாண்களை தரைமட்டத்துக்கு முழுமையாக இடித்து அகற்ற வேண்டும். ஏற்கனவே வடிவமைப்பு செய்து ஒப்புதல் பெற்ற திட்டப்படி, ஆரம்பத்தில் இருந்து மீண்டும் அமைக்க வேண்டும்.



l 265ஏ, 266ஏ, 267ஏ மற்றும் 268ஏ ஆகிய நான்கு துாண்களை ஏற்கனவே திட்டமிட்டபடி, 30 மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும்.




l தகுந்த ஆய்வு மற்றும் பரிசீலனைக்குப் பின், சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டுமா என்பதை அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும்.



மனுதாரர் நிலத்துக்கு முன் அமைத்த துாணை, அவர்களின் கோரிக்கையை ஏற்று, சிறிது துாரம் நகர்த்தலாம். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


@block_B@

'வாய்மையே வெல்லும்'

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'இவ்வழக்கில், 2024, நவ., 7 அன்று எதிர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்த கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறை (சிறப்பு திட்டங்கள்) கோட்ட பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் ஆகிய இரு அதிகாரிகளும், தங்களது சொந்தப் பணத்தில் தலா, 1,000 ரூபாயை, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். துாண்கள் 265ஏ, 266ஏ ஆகியவை, 'உண்மையின் துாண்கள்' என அழைக்கப்பட வேண்டும். இவற்றில், வேறெந்த ஓவியங்களும் வரையக்கூடாது. தமிழக அரசின் குறிக்கோளான, 'வாய்மையே வெல்லும்' என்கிற வாசகங்கள் எழுத வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.block_B


@block_B@

'அதிகாரிகளிடம் வசூலிக்கலாம்'

நீதிபதியின் உத்தரவில், 'துாண்களை இடம் மாற்றி அமைப்பதன் காரணமாக ஏற்படும் அதிக செலவு குறித்து, தமிழக அரசு விசாரணை நடத்தலாம். அதற்கான செலவின தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூலிக்கலாம். இத்திட்டம் தொடர்பான அனைத்து கோப்புகளையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இவ்வழக்கில் விவாதிக்கப்பட்ட துாண்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான கோப்புகளில் உள்ள அனைத்து தகவல்களையும் நகலெடுத்து, ஸ்கேன் செய்ய வேண்டும். ஆவணங்களை வழக்கு கோப்பு களுடன் இணைத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருக்கிறார்.block_B

Advertisement