கால் வாரியது கூகுள் மேப்; காரில் சென்ற பெண் பள்ளத்தில் விழுந்தார்!

5


மும்பை: மஹாராஷ்டிராவில், கூகுள் மேப் தவறாக வழி காட்டியதால், அதை நம்பி வந்த பெண் ஒருவர் காருடன் தண்ணீர் நிரம்பிய பள்ளத்துக்குள் விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மீட்புப் படையினர் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.


மஹாராஷ்டிராவின் நவி மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் பீலாப்பூரில் இருந்து உல்வே என்ற பகுதியை நோக்கி பயணித்தார். கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டி வந்துள்ளார். பீலாப்பூரில் உள்ள பாலத்தை, கூகுள் மேப் காட்டவில்லை. மாறாக அதற்கு அடியில் உள்ள வழியை தவறாக காட்டியது.


இதனையறியாத அந்தப் பெண், கூகுள் மேப் காட்டிய வழியில் பயணித்ததால், அங்கிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அப்போது அங்கு இருந்த மீட்புப் படையினர் உடனடியாக வந்து அந்த பெண்ணை மீட்டனர். இந்த விபத்தில் அந்த பெண்ணுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பிறகு கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து காரும் மீட்கப்பட்டது.
இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. தற்போது அந்தக்காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன.


கூகுள் மேப் செயலி தவறுதலாக வழிகாட்டும் நிகழ்வு இதற்கு முன்னரும் அரங்கேறியுள்ளது. உ.பி.,யின் பதுன் மாவட்டத்தில் கூகுள் மேப் செயலியை நம்பி காரில் பயணித்தவர்கள், 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தனர். அதில் 3 பேர் உயிரிழந்தனர்.


அதேபோல் கடந்த ஆண்டும் கேரளாவில் சுற்றுலா பயணிகள் கூகுள் மேப் செயலி உதவியுடன் பயணித்தனர். ஆனால், கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய சாலையை செயலி காட்டியது. அவர்களும் அதில் சிக்கி பிறகு ஒரு வழியாக பாதுகாப்பாக வெளியேறினர்.

Advertisement