அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்

10


புதுடில்லி: கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள் பெரும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், அதைத் தடுப்பதற்கு 15 வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது



ஆந்திராவில் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் ஒருவர் கடந்த 2023ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி மாணவரின் தந்தை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை ஆந்திர அரசும், ஐகோர்ட்டும் நிராகரித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவரது தந்தை வழக்கு தொடர்ந்தார்.


இதனை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது,கல்வியினாலும், தேர்வு காரணமாக ஏற்படும் அழுத்தம் மற்றம் கல்வி நிறுவனங்களின் ஆதரவு இல்லாத காரணம் ஆகியவற்றால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனக்கூறியது. மேலும், அரசியல்சாசனத்தின் 32வது பிரிவை பயன்படுத்தி, மாணவர் தற்கொலையை தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சட்டம் இயற்றும் வரை இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதன்படி,

1. தேர்வு நேரங்களின் போது, மாணவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் முறையான பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் அல்லது ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

2.கல்வி நிறுவனங்களில் பணியாற்றும்ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் கட்டாயம் ஆண்டுக்கு இரண்டு முறை மன நல பயிற்சிக்கு செல்ல வேண்டும்.

3.கல்வி நிறுவனங்கள் பாகுபாடற்ற அணுகுமுறையை நிலைநிறுத்தி பாதிக்கப்படக்கூடிய மற்றும் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த மாணவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாட ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

4. பாலியல் துன்புறுத்தல், ராகிங் மற்றும் வேறு பிரச்னைகளை கையாள நிறுவனங்களிலேயே குழு அல்லது அதிகாரிகளை ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனரீதியிலான ஆதரவை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

5.பெற்றோருக்கான விழிப்புணர்வு மற்றும் மனநலக் கல்வி உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்க வேண்டும்.

6.விடுதிகள், வகுப்பறைகள், பொது இடங்களிலும் தற்கொலை தடுப்பு எண்களை வைக்க வேண்டும்.

7.வாழ்க்கை திறன்களை மாணவர் செயல்பாடுகளில் இணைப்பதுடன் அத தொடர்பான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.

8.மாணவர் குறைதீர் முகாம்களை நடத்த வேண்டும்.

9.கல்வி தொடர்பான அழுத்தம் - தேர்வு பயம் உள்ளிட்டவற்றை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10.தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க ஒரு தனிக்குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு மாணவர்களுக்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை வழங்கி மனஅழுத்தத்தை குறைக்கும் பணியை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

Advertisement