அரசு நலத்திட்டத்திற்கு ஒதுக்கிய ரூ.70,000 கோடி எங்கே? பீஹார் அரசிடம் கணக்கு கேட்கிறது சி.ஏ.ஜி.,

பாட்னா: 'பீஹாரில், அரசு நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில், 70,000 கோடி ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான பயன்பாட்டு சான்றிதழை, மாநில அரசு சமர்ப்பிக்கவில்லை' என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனால், அந்த திட்டங்களுக்கான நிதியில் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், 2023 - 24ம் நிதியாண்டிற்கான மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முடிக்கப்பட்ட 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு திட்டங்களுக்கான, செலவின பயன்பாட்டு சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 2023 - 24ம் நிதியாண்டில், பீஹாரின் மொத்த பட்ஜெட் 3.26 லட்சம் கோடி ரூபாய். இதில், 79.92 சதவீதமாக 2.60 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது. மீதமுள்ள, 65,512.05 கோடியில், 23,875.55 கோடி ரூபாயை மட்டும் திருப்பி செலுத்தியுள்ளது. அந்த நிதியாண்டில், மாநிலத்தின் செலவுகள் முந்தைய ஆண்டைவிட 12.34 சதவீதம் அதிகரித்துள்ளன.
சான்றிதழ் மாநிலத்தின் மொத்த நிலுவையில் உள்ள கடன்களில் உள்நாட்டு கடன் 59.26 சதவீதம். நிகர கடன்கள் முந்தைய ஆண்டைவிட, 28,107.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளன.
அரசு திட்டங்களுக்கான செலவுத் தொகையை குறிப்பிட்டு நிதி பெறப்படுகிறது.
அவற்றை செலவு செய்த பின், அதற்கான யூ.சி., எனப்படும், அந்தப் பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான பயன்பாட்டு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
திட்டம் முடிந்து ஓராண்டுக்குள் அந்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி இருந்தபோதிலும், 2024, மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 70,877.61 கோடி ரூபாய் மதிப்புடைய திட்டங்களுக்கான 49,649 சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளன. இதில், 14,452.38 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் 2016 - 17ம் நிதியாண்டுடன் தொடர்புடையவை.
அதிகபட்சமாக பஞ்சாயத்து ராஜ் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 28,154.10 ரூபாய்க்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளன. கல்விக்கான 12,623.67 கோடி ரூபாய், நகர்ப்புற மேம்பாட்டுக்கான 11,065.10 கோடி ரூபாய், கிராமப்புற மேம்பாட்டிற்கான 7,800.48 கோடி ரூபாய், விவசாயத்துக்கான 2,107.63 கோடி ரூபாய் ஆகியவற்றிற்கான பயன்பாட்டு சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளன. திட்டம் துவங்குவதற்கு முன்னரே பெறப்பட்ட தொகையில், 9,205.76 கோடி ரூபாய்க்கான, 22,130 சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளன.
சந்தேகம் இது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஒரு திட்டத்துக்காக வழங்கப்பட்ட நிதி, அதற்காக செலவிடப்படாமல் வேறு நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பெரிய அளவிலான தொகைக்கு பயன்பாட்டு சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால், அந்த நிதியில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புஇருக்கிறது.
இந்த விவகாரத்தில், பொது பணத்தை தவறாக பயன்படுத்தியதற்கான அபாயமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.









மேலும்
-
மாலத்தீவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு
-
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்
-
சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்