சிறையிலிருந்து தப்பிய கைதி சில மணி நேரங்களில் கைது

திருவனந்தபுரம் : கேரளாவில், ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வெளியே தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தமிழக கைதி, தப்பி ஓடி கிணற்றில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தின் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் மீது தமிழகம் மற்றும் கேரள போலீசில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர் ஒரு கையை இழந்தவர்.

கடந்த, 2011 பிப்ரவரி 1ம் தேதி கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து சோரனுார் சென்ற ரயிலில் பயணம் செய்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

திருச்சூர் போலீசார், கோவிந்தசாமியை கைது செய்தனர். திருச்சூர் அதி விரைவு நீதிமன்றம் கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதி த்தது. இதை கேரள உயர் நீதிமன்றமும் உறுதிசெய்த நிலையில், உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இவர் கண்ணுார் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டிருந்தார்.

நேற்று அதிகாலை, சிறை கம்பிகளை வளைத்து துணிகளை கட்டி சுவர் ஏறி குதித்து கோவிந்தசாமி தப்பினார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

சிறையிலிருந்து, 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தளாப் என்ற இடத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் கோவிந்தசாமி பதுங்கி இருப்பதாக அறிந்த போலீசார், வீட்டை சுற்றி வளைத்தனர்.

வீட்டின் எந்த பகுதியிலும் அவர் இல்லை. கிணற்றில் பார்த்தபோது அங்கு பதுங்கி இருந்தார். அவரை, போலீசார் கயிறு கட்டி மேலே கொண்டு வந்து கைது செய்தனர்.

Advertisement