படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் எதுக்கு; மாணவர்கள் செயலால் டிரைவர்கள் தவிப்பு

27

திருப்புவனம்: திருப்புவனத்தில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பலரும் படிக்கட்டுகளில் சாகசம் செய்வதால் டிரைவர், கண்டக்டர்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதுரை புறநகர், திருநகர் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து டவுன் பஸ்கள் மத்திய பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கப்படுகின்றன. கொத்தங்குளம், வெள்ளிக்குறிச்சி, மேலசொரிக்குளம் , சொக்கநாதிருப்பு, கணக்கன்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் டவுன் பஸ்களில் மாணவர்கள் பலர் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றனர். பக்கவாட்டு கம்பிகளை பிடித்தபடியும், ஒருவர் மீது ஒருவர் ஏறிக்கொண்டும் பயணம் செய்கின்றனர். பஸ்களின் உள்ளே இடமிருந்தாலும் கூட இது தொடர்கிறது.

Latest Tamil News
அடுத்தடுத்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டாலும், குறிப்பிட்ட கிராமங்களில் இருந்து வரும் பஸ்களில் மாணவர்களின் அடாவடி செயல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தட்டி கேட்டால் டிரைவர், கண்டக்டர்களை கூட்டமாக சேர்ந்து மிரட்டுகின்றனர். இதனால் அவர்கள் கண்டு கொள்வது இல்லை. பெற்றோர் கள் கண்டுகொள்வதே கிடையாது. போலீசாரும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.


போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியது: முன்பெல்லாம் இது போல நடந்தால் கிராமங்களில் கண்டிப்பார்கள். சமீப காலமாக கண்டுகொள்வதில்லை.




பஸ்சில் பக்கவாட்டு கம்பியை பிடித்தபடியே தொங்கி கொண்டு வருகின்றனர். லாரி, வேன், ஆட்டோ போன்றவற்றை முந்த முடியாமல் செல்ல வேண்டியுள்ளது. அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம். வழக்கு, கோர்ட் என அலையவேண்டியுள்ளது. பஸ்களில் கதவு அமைக்கும் பணியை தீவிரப்படுத்தினால் இது போன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், என்றனர்.

Advertisement