அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது... எப்போது? மேல்மலையனுாரில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு அடிப்படை வசதிகளையும், உள் கட்டமைப்பையும் விரிவுபடுத்தாமல் இருப்பதால், பக்தர்கள் கடும்பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மிக முக்கியமான ஆன்மிக தலமான மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் கடந்த 30 ஆண்டுகளில் விஸ்வரூப வளர்ச்சியை பெற்றுள்ளது.
இங்கு நடக்கும் பாரம்பரிய தேர்திருவிழாவான மாசி பெருவிழாவிற்கும், ஆடி மாதத்தில் பொங்கல் வைத்து வழிபட பக்தர்கள் அதிகம் வந்தனர். இந்த நிலை மாறி தற்போது ஒவ்வொரு அமாவாசைக்கும் 1 முதல் 2 லட்சம் பக்தர்கள் வரை குவிகின்றனர்.
சாதாரண நாட்களில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம்; ஞாயிற்றுக்கிழமைகளில் 25 ஆயிரம்; என பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்கள் வருகையுடன் ஒப்பிடும் போது கோவில் வளாகத்திலும், ஊரிலும் இதுவரை செய்துள்ள அடிப்படை வசதிகள் 20 சதவீதத்தை கூட எட்ட வில்லை.
அமாவாசை உற்சவம் இந்த கோவிலில் சித்திரை, மாசி மாதம் தவிர மற்ற மாதங்களில் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் இரவு 11:00 மணிக்கு துவங்கி 12:00 மணிக்கு முடிந்து விடும்.
இதன் பிறகு ஒரு பகுதி பக்தர்கள் வெளியேறினாலும், ஒரு பகுதியினர் அதிகாலை வரை கோவில் வளாகத்தில் தங்கி இருந்து காலையில் செல்கின்றனர். மாசி, சித்திரை மாதத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் இங்கு தங்குகின்றனர்.
அடிப்படை வசதி இந்த கோவிலுக்கு வருபவர்கள் மற்ற கோவிலை போல் சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விடுவதில்லை. பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதுபவர்களும், திருமண தடை, தம்பதிகளுக்குள் பிரச்னை, கடன் பிரச்னை, தீராத நோய் உள்ளவர்களும் இங்கே இரவு தங்கி இருந்து மறுநாள் செல்கின்றனர்.
அத்துடன் லட்சக்கணக்காண குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். இதனால் பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள், குடிநீர், கழிவறை வசதிகள் மற்ற கோவில்களை விட அதிகம் தேவைப்படுகிறது.
குவியும் பக்தர்கள் ஆனால் தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மற்ற கோவில்களுக்கு ஒதுக்கும் நிதியை விட மிக குறைந்த அளவிலேயே இந்த கோவிலுக்கு ஒதுக்குகிறது.
இது ஒருபுறம் இருக்க, நேற்று முன்தினம் இரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வந்திருந்தனர்.
கழிவறை இல்லை இவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த தற்காலிக பஸ் நிலையங்களில் கழிப்பறை வசதிகளை செய்ய வில்லை.
பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையை கட்டும் பணி நடப்பதால் அங்கும் கழிவறை இல்லை. இரவு முழுவதும் பெண்கள் கழிப்பிட வசதிகள் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இன்றி கடைகளில் தண்ணீர் பாட்டில் வங்கி பயன்படுத்தினர். அகலம் குறைவான சாலைகளில் ஆங்காங்கே வாகனங்கள் நின்றதால் வளத்தி, அவலுார்பேட்டை மார்க்கம் இருந்து வந்த பக்தர்கள் 3 முதல் 4 கி.மீ., துாரத்திற்கு மின் விளக்கு வசதி இல்லாத சாலைகளில் நடந்து வந்தனர்.
சாலைகளில் தஞ்சம் பக்தர்கள் தங்குவதற்காக கட்டியுள்ள கூடங்களில் பிச்சைக்காரர்களும், சமூக விரோதிகளுமே தங்கி உள்ளனர்.
அதுவும், 500க்கும் குறைவான பக்தர்களே இதில் தங்க முடியும். நேற்று முன்தினம் இங்கு வந்திருந்த
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி மேல்மலையனுாரில் உள்ள குறுக்கு சாலைகளில் மண் தரையில் குழுந்தைகளுடன் துாங்கினர். நல்ல வேலையாக மழை இல்லாமல் இருந்ததால் பக்தர்கள் அதில் இருந்து தப்பினர்.
யாத்ரீகர் நிவாஸ் தேவை இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் அதிகம் வருவாய் வரும் கோவில்களில் மேல்லையனுாரும் ஒன்று. பல கோடி வருவாயை அம்மனுக்கு காணிக்கையாக தரும் பக்தர்களுக்கு சில கோடிகளில் தங்கும் விடுதி கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ளாததால், பக்தர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது.
எனவே இந்து சமய அறநிலையத்துறை நிபுணர்களின் ஆலோசனையை பெற்று மேல்மலையனுாரில் பெரிய அளவிளான திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும், அத்துடன் ஸ்ரீரங்கம், திருப்பதி உள்ளிட்ட பெரிய கோவில்களில் உள்ளதை போல், கழிவறை, குளியல் அறை, கிளாக் ரூம் வசதியுடன் கூடிய யாத்ரீகர் நிவாஸ் அமைத்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
@block_B@
கடந்த, 2001-2006ம் ஆண்டுவரை தமிழக முதல்வராக ஜெ., இருந்த போது, மேல்மலையனுாருக்கு பக்தர்கள் அதிகம் வருவதை அப்போதைய எம்.எல்.ஏ., தமிழ்மொழி ராஜதத்தன் அவரது கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து ஒரு வழியாக இருந்த வளத்தி, அவலுார்பேட்டை, சிறுதலைப்பூண்டி உள்ளிட்ட சாலைகளை இருவழி சாலையாக அகலப்படுத்த முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். அத்துடன் ஜெயின் கோவில் வழியாக கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல புதிதாக ஏரியை ஒட்டி சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது மிக முக்கியமான சாலையாக மாறி உள்ளது. ஒவ்வொரு மாதமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பல கி.மீ., துாரம் நடந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக மேல்மலையனுாருடன் இணையும் அனைத்து சாலைகளையும் நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும். கொடுக்கன்குப்பம் சாலையில் உள்ள பாட்டை புறம்போக்கு இடத்தில் பெரிய அளவில் நவீன கழிவறைகளை கட்ட வேண்டும். அருண்தத்தன், அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி மாவட்ட பொருளாளர், விழுப்புரம் மாவட்டம்.block_B
@block_B@
தாலுகாவாக உள்ள மேல்மலையனூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை. திருவிழாவின் போது மட்டும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும், இப்போது எல்லா நாட்களிலும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு ஊரில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு விரிவான பஸ் நிலையம் இல்லாததால் விழா நாட்களில் பஸ்களை ஊரின் முக்கிய சாலைகளில் நிறுத்துகின்றனர். உடல் நலம் பதிக்கப்பட்டவர்களை அவசரத்திற்கு வெளியே கொண்டு செல்ல ஆம்புலென்ஸ்கள் கூட வர முடியவில்லை. விழா நாட்களுக்கு அடுத்த நாள் ஏராளமான குப்பைகள், கழிவுகளாலும் கிராமம் வசிப்பதற்கு தகுதியற்றதாக மாறி விடுகிறது. சுற்று சூழலும், சுகாதாரமும் இல்லாமல் இங்கு வசிப்பவர்கள் அவதிப்படுகின்றோம். எனவே மேல்மலையனுாரை பேரூராட்சியாக தரம் உயர்த்தி, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். நிர்மல்குமார், மேல்மலையனுார்.block_B
@block_B@
மேல்மலையனுாருக்கு கோவிலும், பெரிய ஏரியும் பெருமை சேர்ப்பவை. இந்த ஏரியில் இருந்தே சங்கராபரணி ஆறு துவங்குகிறது. ஆனால் ஏரியில் குப்பையை கொட்டி தண்ணீர் மாசடைந்து விட்டது. இதில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏரியில் குப்பைகளை எரிப்பதால் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். கோவிலுக்கு வரும் வாகனங்களை ஊருக்கு வெளியே நிறுத்தி விட்டு ஒரே ஒரு பேட்டரி பஸ்சை இயக்கினர். லட்சக்கணக்காணவர்களுக்கு ஒரு மினி பஸ் போதுமா. வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்தவர்கள் அவதிக்கு ஆளாகினர். கழிவறை வசதி செய்ய வில்லை. பக்தர்களிடம் வருவாயை மட்டும் பெற்று கொள்ளும் இந்து சமய அறநிலையத்துறை அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. இது குறித்து பல முறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எனவே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க விரைவில் பா.ஜ., சார்பில் மாநில தலைவரின் அனுமதி பெற்று மாநில, மாவட்ட தலைவர்களை வரவழைத்து மிக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பிரசன்னா வெங்கடாஜலபதி பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர், விழுப்புரம் வடக்குblock_B
@block_B@
வழக்கமாக அமாவாசையன்று வள்ளலார் கோவில் அருகே இருந்து அனைத்து ஊர்களுக்கும் பக்தர்கள் பஸ் ஏறுவார்கள். ஆடி அமாவாசையினால் கூட்டம் அதிகம் இருந்ததால் போலீசார் ஊருக்குள் பஸ்களை அனுமதிக்க வில்லை. இது தெரியாத பக்தர்கள் வள்ளலார் கோவில் அருகே வந்து அங்கிருந்து எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பஸ் புறப்படும் என தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர். இதை தெரியப்படுத்த போக்குவரத்து துறையும், போலீசாரும் அறிவிப்பு பேனர்களை ஏற்பாடு செய்திருந்தால் பக்தர்கள் வீண் அலைச்சலுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.block_B

மேலும்
-
பள்ளி திறப்பு விழா: கவர்னர் பங்கேற்பு
-
கால் வாரியது கூகுள் மேப்; காரில் சென்ற பெண் பள்ளத்தில் விழுந்தார்!
-
மாலத்தீவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு