பெண் போலீசின் 30 சவரன் திருட்டு சக போலீஸ்காரர்-, நண்பர் கைது

திருநெல்வேலி : பெண் போலீஸ் வீட்டில் 30 சவரனை திருடிய சக போலீஸ்காரர், அவரது நண்பர் கைது செய்யப் பட்டனர்.

திருநெல்வேலி ஆயுதப்படை பெண் போலீஸ் தங்கமாரி, 44, தற்போது, போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக உள்ளார். கணவர் ராஜ்குமார் சுய தொழில் செய்கிறார். இரு மகள்கள் உள்ளனர். இவர்கள், மாநகர ஆயுதப்படை வளாக காவலர் குடியிருப்பில் இரண்டா-வது மாடியில் வசிக்கின்றனர்.

ஜூலை 16ல், மகள்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு, தங்கமாரி பணிக்கு சென்றார். மதிய உணவுக்காக அவர் வீட்டிற்கு வந்த போது, பீரோவில், 30 சவரன் நகைகள் மாயமாகியிருந்தன.

அவரது புகாரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விசாரித்தனர். இதில், ஆயுதப்படை வளாகத்தில் குடியிருக்கும் போலீஸ்காரர் மணிகண்டன், தன் நண்பர் முகமது அசாருதீன், 31, என்பவருடன் இணைந்து திருடியது தெரிந்தது.

மணிகண்டன் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார். அதை ஈடு செய்ய நகையை திருடியுள்ளார் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மணிகண்டன், அவரது நண்பர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement