டாக்டர் வீட்டில் 97 சவரன் ரூ.10 லட்சம் கொள்ளை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே அரசு டாக்டர் வீட்டில், 97 சவரன் நகை, 10 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், புதுப்பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 44; முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர். இவரது மனைவி ஆர்த்தியும் டாக்டர். தம்பதி விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

புதுப்பிள்ளையார்குப்பம் வீட்டின் கீழ் தளத்தில் ராஜாவின் பெற்றோர் வசிக்கின்றனர். மேல்தளத்தில் ராஜா தங்குவது வழக்கம். நேற்று காலை, ராஜா தந்தை காசிலிங்கம், வீட்டின் மேல் மாடிக்கு சென்றார்.

கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு, 97 சவரன் நகைகள், 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. நகைகள் மதிப்பு, 70 லட்சம் ரூபாய்.

எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., ராஜா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்த குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.

Advertisement