நிலுவையில் ரூ.63,000 கோடி குடிநீர் வரி; திணறும் டில்லி அரசு

3

புதுடில்லி: மத்திய, மாநில அரசுத்துறைகள் குடிநீர் வரி ரூ.63,000 கோடியை பாக்கி வைத்துள்ளதால், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள போதிய நிதியில்லாமல் டில்லி அரசு திணறி வருகிறது.



டில்லி நீர்வளத்துறை வெளியிட்ட தகவலின்படி, டில்லி அரசின் பல்வேறு துறைகள் ரூ.33,295 கோடியும், மத்திய அரசின் துறைகள் ரூ.29,737.37 கோடியும் குடிநீர் வரி நிலுவைத் தொகையாக உள்ளது. இதில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி போலீஸ் ரூ.6,097 கோடியும், ரயில்வே துறை ரூ.21,530 கோடியும் குடிநீர் வரியை பாக்கி வைத்துள்ளன. டில்லி மாநகராட்சி ரூ.26,147 கோடி நிலுவையில் வைத்துள்ளது. இதுமட்டுமில்லாமல், டில்லி குடியிருப்புவாசிகள் ரூ.15,000 கோடி குடிநீர் வரியை செலுத்தாமல் உள்ளனர்.


இது குறித்து டில்லி நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; 2012-13 முதல் இந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துவதில் பிரச்னை இருந்து வருகிறது. வரியை செலுத்துவது தொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், இதுவரை தொகை செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக, பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்தப் பிரச்னையில் அரசு உடனடியாக தலையிட வேண்டும்.


குடியிருப்புவாசிகளுக்கு மட்டும் உயர்த்தப்பட்ட குடிநீர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால், வணிக ரீதியிலான பயனாளிகள் மட்டும் அரசு நிறுவனங்களுக்கு இது பொருந்தாது, எனக் கூறினார்.


டில்லி நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறுகையில், "தடையில்லாத நீர் விநியோகத்தை உறுதிப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். ஒவ்வொரு டில்லி குடிமகனின் நலனுக்காக, இந்தப் பிரச்னையில் தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்," எனக் கூறினார்.

Advertisement