கட்டடம் இருக்கு; புத்தகம் இருக்கு... சொல்லி தர யார் இருக்கா?: அரசு கலை கல்லுாரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பேராசிரியர்கள் பற்றாக்குறையால், ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு, 3.50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர் கல்வி பெறுகின்றனர். அதனால், தற்போதைய உயர் கல்வி சேர்க்கை, 51.3 சதவீதமாக உள்ளது.
இது, தேசிய சராசரியை விட, இரண்டு மடங்கு அதிகம். இதற்கு முக்கிய காரணம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் எண்ணிக்கை.
தமிழகத்தில், 2011 வரை, 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் இயங்கின. அடுத்த பத்தாண்டுகளில், 41 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் புதிதாக துவங்கப்பட்டன. அதை தொடர்ந்து, பல்கலைகளின், 41 உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டன. இதே காலகட்டத்தில், 1,666 புதிய பாடப்பிரிவுகளும் துவங்கப்பட்டன.
அடுத்து, 2021 முதல் 2023 வரை, புதிதாக, 20 கல்லுாரிகளை, அரசு துவக்கியது. இந்தாண்டு புதிதாக, 11 கல்லுாரிகள் துவக்கப்பட்டு சேர்க்கை நடந்துள்ளது.
அந்த வகையில், 14 ஆண்டுகளில் துவக்கப்பட்ட 113 கல்லுாரிகளுடன், பழைய 62 கல்லுாரிகளையும் சேர்த்து, தற்போது, 175 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் இயங்குகின்றன.
மற்ற மாநிலங்களில், இத்தனை கல்லுாரிகளை துவக்கி, ஏழை மாணவர்கள் உயர் கல்வியில் சேர பல ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும், அதிக கல்லுாரிகளால் மட்டுமே சாதிக்க முடியாது என்கின்றனர் கல்வியாளர்கள்.
பற்றாக்குறை கடந்த, 2006 முதல், 2011 வரை, ஆசிரியர் தேர்வாணையமான டி.ஆர்.பி., வாயிலாக, நான்கு கட்டங்களாக, 3,500 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அடுத்த பத்தாண்டுகளில், 957 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போதுள்ள, 175 கல்லுாரிகளில், 5,000க்கும் குறைவான பேராசிரியர்களே பணியாற்றுகின்றனர்.
அதேநேரம், மாதம் 25,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு பணி ஒன்றாக இருந்தாலும், ஊதியம், 25 சதவீதமே.
சாதனையா, சோதனையா? இந்தாண்டு புதிதாக துவங்கப்பட்ட கல்லுாரிகளுக்கு, பேராசிரியர்கள் பணியமர்த்தப்படவில்லை. அருகில் உள்ள கல்லுாரிகளின் நிரந்தர பேராசிரியர்கள் தான், அங்கு பாடம் நடத்த அனுப்பப்படுகின்றனர். இதனால், அவற்றின் நிர்வாகம் சீர்குலையும் வாய்ப்பு உள்ளது.
தடை அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து, உயர் கல்வித்துறை அமைச்சராகியுள்ள கோவி.செழியனும், 'உதவி பேராசிரியர் பணியிடங்களை விரைவாக நிரப்புவோம்' என்றார்.
2021ல், 1,146 கவுரவ விரிவுரையாளர்களை, உதவி பேராசிரியர்களாக பணி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டு, சட்டசபை தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்து, 2022ல், 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்புவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நியமனத்துக்கு தேர்வான 1,146 பேரின் சார்பில் வழக்கு தொடரப்பட்டதால், பணி நியமனம் இதுவரை நடக்கவில்லை.
'ஷிப்ட் 2' 'உயர்வுக்குப்படி' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக, அதிக மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்காக, அனைத்து கல்லுாரிகளிலும் ஷிப்ட் 2 எனும், மாலை நேர வகுப்புகள் நடக்கின்றன. அவற்றுக்கும் ஒரு நிரந்தர பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை.
இல்லாத துறைகள் கடந்த 2023 - 2024ல், ஐந்து அரசு கல்லுாரிகளில், எம்.பி.ஏ., பாடப்பிரிவு துவக்கப்பட்ட நிலையில், அவற்றுக்கு இதுவரை, ஒரு கவுரவ விரிவுரையாளர் கூட நியமிக்கப்படவில்லை.
தனியார் கல்லுாரிகளில், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், வேலைவாய்ப்பு தகவல்கள், அதுசார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அதற்கான புத்தகங்கள், கல்லுாரி நுாலகங்களில், எளிதில் அணுகும் வகையில் உள்ளதுடன், நுாலகத்தில், இலவச இணைய வசதியும் செய்யப்படுகிறது.
ஆனால், 110 அரசு கல்லுாரிகளில், நுாலகர் பணியிடம் காலியாக உள்ளதால், புத்தகம் வாசிக்கும் மாணவர்களுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது.அதேபோல, விளையாட்டில் சாதித்து, வேலைவாய்ப்பை பெற நினைக்கும் வீரர் - வீராங்கனையரின் கனவுக்கு தடையாக, 80க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
சிதையும் எதிர்காலம் கல்லுாரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய், 'தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண்' திட்டங்களால் வழங்கப்படுகிறது.
அவர்கள், அரசு கல்லுாரியில் சேர்ந்தால், தரமான கல்வி கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்.
அரசுக் கல்லுாரி மாணவர்களின் நலன் காக்க, வழக்குகளுக்கு விரைவில் தீர்வு கண்டு, உதவி பேராசிரியர்களை நியமித்து, தரமான உயர் கல்வியை வழங்க, அரசு முன்வர வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பு.
எங்களால் எப்படி முடியும்?
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் ஏழு கல்வியியல் கல்லுாரிகளில், 20 ஆண்டுகளாக, 7,300க்கும் மேற்பட்டோர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுகிறோம். எங்களுக்கு மாதம், 25,000 ரூபாய் தான் சம்பளம்.
எங்களில், 1,146 பேரை, 12 வாரங்களில் நிரந்தரம் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு இதுவரை செய்யவில்லை. 10,000க்கும் மேற்பட்டோர் தேவைப்படும் நிலையில், 7,000 கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமே பணியாற்றுகிறோம். அதிலும், ஒரு துறைக்கு ஒருவர் என்ற நிலையில் உள்ளோம்.
நாங்களே 45 வயதாகியும் பணி நிரந்தரம் பெறாத நிலையில், மாணவர்களுக்கு எப்படி, எங்களால் தன்னம்பிக்கை ஊட்ட முடியும்?
- கவுரவ விரிவுரையாளர்கள்
காலி பணியிடங்களை
நிரப்புவது தான் ஒரே வழி
தமிழகத்தில், 15 ஆண்டுகளில், கல்லுாரிகளும், மாணவர்களும் இரண்டு மடங்காகி விட்ட நிலையில், பேராசிரியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இதனால், கல்வித்தரமும் குறைந்துள்ளது. இந்தாண்டு, ஷிப்ட் 1ல், 101; ஷிப்ட் 2ல், 152 என, மொத்தம் 253 பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றுக்கு, மூன்றாண்டுகளுக்கு நிரந்தர பேராசிரியர்கள் கிடையாது என, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி, 5,145 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதுடன், மேலும், 5,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரந்தர பணியாளர்களால் தான், அரசுக் கல்லுாரிகள் வளர்ச்சி பெற்று, உயர் கல்வித் துறை உயரும்.
- சொ.சுரேஷ், பொதுச்செயலர், அரசுக் கல்லுாரி ஆசிரியர் கழகம்.
- நமது நிருபர் -

மேலும்
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
-
அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது