750 மெகாவாட் 'பேட்டரி ஸ்டோரேஜ்' பசுமை மின்சாரத்தை சேமிக்க அனுமதி

சென்னை: தமிழகத்தில், ஒரு மணி நேரத்திற்கு, 750 மெகாவாட் பசுமை மின்சாரத்தை சேமிக்கும், 'பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்' திட்டத்தை செயல்படுத்த, பசுமை எரிசக்தி கழகத்துக்கு, மத்திய மின்துறை அனுமதி அளித்துள்ளது.
வெளிநாடுகளில் இருப்பது போல நம் நாட்டிலும், காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய பசுமை மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, அதிக திறன் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜில் சேமித்து, தேவை ஏற்படும் போது பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு நிதியுதவி செய்கிறது.
அதன்படி, தமிழகத்தில், 1000 மெகாவாட் பேட்டரி ஸ்டோரேஜ் திட்டத்தை, 2024ல் செயல்படுத்த மத்திய அனுமதி அளித்தது. இதையடுத்து, துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, ஒட்டப்பிடாரம் மற்றும் விருதுநகர் மாவட்டம் அனுப்பன்குளம் துணை மின் நிலையங்களில், 500 மெகாவாட் பேட்டரி கட்டமைப்புக்கு, என்.எல்.சி., 'ரினிவபிள்ஸ்' நிறுவனத்துக்கு, மின் வாரியத்தின் பசுமை எரிசக்தி கழகம், கடந்த ஜூனில் ஆணை வழங்கியது.
மேலும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி துணை மின் நிலையத்தில், 100 மெகா வாட்டிற்கு, 'ஓரியானா' நிறுவனத்திற்கும்; திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி மற்றும் புதுக்கோட்டை வெள்ளாளவிடுதி துணை மின் நிலையங்களில், 400 மெகா வாட் பேட்டரி கட்டமைப்புகள் ஏற்படுத்த, 'பொன்டாடா இன்ஜினியரிங்' நிறுவனத்துக்கும், பணி ஆணை வழங்கப்பட்டது.
தற்போது, தமிழகத்தில் கூடுதலாக, 750 மெகாவாட் பேட்டரி ஸ்டோரேஜ் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பேட்டரி ஸ்டோரேஜ் திட்டத்தை, ஒப்பந்த நிறுவனங்கள் சொந்த செலவில் அமைக்க வேண்டும். ஒரு மெகாவாட் திட்ட செலவில், 30 சதவீதம் வரை மானியம் அல்லது அதிகபட்சம், 27 லட்சம் ரூபாய் என, இரண்டில் எது குறைவோ, அந்த நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
தமிழகத்தில், 1000 மெகாவாட் பேட்டரி திட்டத்தை அமைக்க மூன்று நிறுவனங்களுக்கு சமீபத்தில் ஆணை வழங்கப்பட்டது.
அந்நிறுவனங்களிடம் பசுமை மின்சாரத்தை வழங்கி, மாலையில் ஏற்படும் உச்ச மின் தேவையை சமாளிக்க, மீண்டும் வாங்கிக் கொள்ளப்படும்.
இதற்கு ஒரு மெகா வாட்டிற்கு ஒரு மாதத் திற்கு 2.46 லட்சம் - 2.48 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இதே அடிப்படையில் கூடுதலாக 750 மெகாவாட் பேட்டரி ஸ்டோரேஜ் அமைக்க, துணை மின் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இதனால், உச்ச நேர மின் தேவையை சமாளிக்க, மின்சார சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக, தி.மு.க.,வினரை நியமிக்க முயற்சி: அ.தி.மு.க., வழக்கு
-
அனைத்து ஆயுதப்படையினர் அடங்கிய 'ருத்ரா' குழு: அறிவித்தார் ராணுவ தளபதி
-
12 ராக்கெட்கள் ஏவ திட்டம்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
-
மோகன் பகவத்- - இமாம், மவுல்வி சந்திப்பு
-
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியர்!
-
ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கொடூரம்