அ.தி.மு.க., அரசின் திட்டங்களில் தி.மு.க., 'ஸ்டிக்கர்'; மா.செ.,க்களிடம் பட்டியல் கேட்கிறார் பழனிசாமி



அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொண்ட திட்டங்களில், தி.மு.க., 'ஸ்டிக்கர்' ஒட்டி திறந்து வைத்த பணிகள் எவை என்பது குறித்த பட்டியலை கட்சியின், மாவட்டச்செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேட்டுள்ளார்.



சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொகுதி வாரியாக, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' எனும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.



கோவையில் பயணத்தை துவங்கிய அவர், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, திருவாரூர் , நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சென்றார்.



அடுத்த கட்டமாக, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில், செப்டம்பரில் பழனிசாமி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.



30,000 பேர் பயணத்தின்போது, உள்ளூர் பிரச்னை உள்ளிட்ட பட்டியலை தயாரித்து வைக்கும்படி, மாவட்டச் செயலர், எம்.எல்.ஏ.,க்களுக்கு, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து, அ.தி.மு.க., வினர் கூறியதாவது:



சுற்றுப்பயணத்தின்போது, பழனிசாமி பேசும் இடங்களில், 20,000 பேர் முதல், 30,000 பேர் வரை பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


இளைஞர்கள், பெண்களை அதிகளவில் வரவழைக்க வேண்டும் என, மாவட்டச் செயலர்களிடம் கூறப்பட்டுள்ளது.




மேலும், கடந்த 2011 - 21 அ.தி.மு.க., ஆட்சி யில் மேற்கொண்ட திட்டப் பணிகள், பழனிசாமி முதல்வராக இருந்தபோது செயல்படுத்திய திட்டங்கள் போன்றவற்றின் விபரங்களை சேகரிக்க வேண்டும்.



அத்திட்டங்களில், தி.மு.க., அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டி திறந்து வைத்தவை; தி.மு.க., வாக்குறுதி அளித்து நிறைவேற்றாத திட்டங்கள்; கிடப்பில் உள்ள திட்டங்கள் போன்றவற்றை சேகரித்து பட்டியல் தயாரித்து அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



புது மாவட்டங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்து நிறுத்தப்பட்ட, மாற்றம் செய்த திட்டங்கள் குறித்தும், விரிவான தகவல் கேட்கப்பட்டுள்ளது.



பழனிசாமியின் பிரசார பயணத்தின்போது, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், என்னென்ன புது மாவட்டங்கள் உருவாகும் என்ற அறிவிப்பையும் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மத்திய அரசு உதவியுடன் மேற்கொள்ளும் திட்டங்களையும் பழனிசாமி அறிவிப்பார். எனவே, அது தொடர்பான, பட்டியலையும் அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தயாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் --

Advertisement