பும்ரா விரைவில் ஓய்வு * முகமது கைப் சூசகம்

புதுடில்லி: ''அஷ்வின், கோலி, ரோகித்தை தொடர்ந்து, பும்ரா டெஸ்டில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார்,'' என முகமது கைப் தெரிவித்தார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 31. கடந்த 2023ல் முதுகில் ஆப்பரேஷன் செய்தார். இதிலிருந்து மீண்ட இவர், இங்கிலாந்து தொடரில் பங்கேற்றுள்ளார். போதிய உடற்தகுதி இல்லாததால், முழு வேகத்தில் பந்துவீச முடியாமல் தவிக்கிறார்.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப் கூறியது:
அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் பும்ரா பங்கேற்க மாட்டார் என நினைக்கிறேன். அஷ்வின், கோலி, ரோகித் போல, விரைவில் பும்ராவும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இனிமேல் பும்ரா இல்லாத டெஸ்ட் போட்டிகளை பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.
நான் சொல்வது தவறாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆனால் மான்செஸ்டர் டெஸ்டில், பும்ரா போராடுகிறார். மன உறுதி, ஆர்வம் இருந்தாலும், உடல் ஒத்துழைக்கவில்லை.
விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் பும்ராவின் வேகம் குறைந்து விட்டது. எந்த ஒரு பேட்டரையும், நினைத்த நேரத்தில் வீழ்த்தும் திறன் கொண்டவர் பும்ரா. ஒருவேளை, தேசத்திற்காக 100 சதவீதம் முயற்சித்து விக்கெட் சாய்த்து, போட்டியை வென்று தர முடியவில்லை என்றால், போட்டியில் பங்கேற்காமல் இருக்கலாம் என்று தான் அவரது மனம் சொல்லும்.
இந்த ஏமாற்றம், நான்காவது டெஸ்டில் நன்றாகத் தெரிகிறது. அடுத்து வரும் போட்டிகளிலும் இது தொடரலாம். இதனால் பும்ரா டெஸ்டில் பங்கேற்பதை நாம் பார்க்க முடியாமல் போகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

குறைந்தது 'வேகம்'
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பும்ரா (5 விக்.,), 39.84 சதவீத பந்துகளை, 140 கி.மீ.,க்கும் அதிகமான வேகத்தில் வீசினார். 3வது டெஸ்டில் இது 26.84 சதவீதம் ஆனது. வேகம் சற்று குறைந்தாலும் மொத்தம் 7 விக்கெட் (5+2) சாய்த்தார். இந்த மகிழ்ச்சியைக் கூட அவரால் கொண்டாட முடியவில்லை. அந்தளவுக்கு சோர்ந்து விட்டார்.
தற்போது 4வது டெஸ்டில் பும்ரா, பெரும்பாலும் 130 முதல் 135 கி.மீ., வேகத்தில் தான் பந்து வீசுகிறார். 173 பந்தில் ஒரு முறை மட்டும் 140 கி.மீ., வேகத்தை எட்டினார்.

112 ரன்
மான்செஸ்டர் டெஸ்டில் பும்ரா தனது மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் இவர் முதன் முறையாக 100 ரன்னுக்கும் மேல் (112/2) விட்டுக் கொடுத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் 99/4 (2024ல்) ரன் கொடுத்து இருந்தார்.

Advertisement