பெயர் மாறியதால் வந்த வினை; 22 நாட்கள் சிறைவாசம்; 17 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்திய உ.பி நபர்!

1

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பெயர் மாறியதால் வழக்கு ஒன்றில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜ்வீர் சிங் என்பவர் 22 நாட்கள் சிறைவாசமும், 17 ஆண்டுகள் சட்ட போராட்டத்தை அனுபவித்துள்ளார்.



உத்தரபிரதேசத்தில், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி, 2008ம்ஆண்டு தேர்தல் தேர்தல் நேரத்தில் அடிதடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மெயின்புரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக மனோஜ் யாதவ், பிரவேஷ் யாதவ், போலா யாதவ் மற்றும் ராம்வீர் சிங் யாதவ் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.


பின்னர் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ராம்வீருக்குப் பதிலாக, ராம்வீரின் மூத்த சகோதரர் ராஜ்வீர் சிங் யாதவின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப் பட்டது. அந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, ராஜ்வீர் கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து, ஆக்ராவில் உள்ள சிறப்பு குண்டர் சட்ட நீதிமன்றத்தில், தனது பெயர் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது எனக்கூறி ராஜ்வீர் சிங் மனுவைத் தாக்கல் செய்தார். விசாரணைக்குப் பிறகு, 22 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த, ராஜ்வீர் சிங் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படவில்லை. இது தொடர்பாக 17 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இதனால் அவர் சட்டப் போராட்டங்களை அனுபவித்து வந்தார்.

தற்போது, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது 55 வயதில், ராஜ்வீர் இறுதியாக வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.மெயின்புரி நீதிமன்றம் ராஜ்வீர் சிங் யாதவை நிரபராதி என்று அறிவித்து, அலட்சியமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளது.போலீசார் சில வாரங்களுக்குள் தவறை ஒப்புக்கொண்டாலும், வழக்கு நீதிமன்றத்தில் 17 ஆண்டுகள் நீடித்தது, அவரது வாழ்வாதாரம், அவரது குழந்தைகளின் கல்வி மற்றும் அவரது மன அமைதியைப் பறித்தது. ராஜ்வீர் சிங்கிற்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

வேலை செய்ய முடியல...!

இது தொடர்பாக 17 ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தை அனுபவித்த ராஜ்வீர் சிங் கூறியதாவது:

நான் 17 ஆண்டுகளாக வழக்கை எதிர்த்துப் போராடினேன். அந்த நேரத்தில், யார் வழக்கு தொடர்ந்தார்கள் என்று கூட எனக்கு தெரியாது. அவர்கள் எனது பெயரை வழக்கில் சேர்த்து விட்டார்கள்.
எனக்கு வேலை செய்ய முடியவில்லை. என் குழந்தைகளுக்கு என்னால் படிக்க வைக்க முடியவில்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்.

இழப்பீடு தாங்க

எப்படியோ என் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தேன். என் மகன் படிப்பை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. எனக்கு இதைச் செய்த அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குறைந்தபட்சம், நான் அனுபவித்ததற்கு எனக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement