வேலை தேடி துபாய் சென்ற ஹைதராபாத் பெண்; போதைப்பொருள் வழக்கில் கைது

ஹைதராபாத்: பியூட்டி பார்லர் வேலைக்காக துபாய்க்கு சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 வயது பெண், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கொண்டா ரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் அமீனா பேகம்,24. இவர் கடந்த மே 18ம் தேதி பியூட்டி பார்லர் வேலைக்காக, தனியார் ஏஜென்ட் மூலம் துபாய் சென்றுள்ளார்.


துபாய் விமான நிலையத்தில் இறங்கிய அவரின் உடமைகளை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது, அமீனாவிடம் இருந்த பையில் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


சிறையில் இருந்தவாறு ஹைதராபாத்தில் உள்ள தனது குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு, தான் கைது செய்யப்பட்ட விபரத்தை கூறியுள்ளார். இதனைக் கேட்டு அவரது குடும்பத்தினர் பதறிப் போயுள்ளனர்.


இதையடுத்து, தனது மகளை பத்திரமாக மீட்டுத் தரக் கோரி அமீனாவின் தாயார் சுல்தான் பேகம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "மகள் அமீனாவிடம் கொடுத்து அனுப்பப்பட்ட பையை துபாயில் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு, சம்பந்தப்பட்ட ஏஜென்ட் கூறியுள்ளார். அந்தப் பையில் என்ன இருப்பது என்பது கூட எனது மகளுக்கு தெரியாது. அப்பாவியான என் மகளுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். தாயை பிரிந்து வாழும் அவனுக்கு தற்போது உடல்நிலை சரியில்லை. என்னுடைய உடனடியாக மீட்டுத் தர வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், அமீனாவுக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுத்த ஏஜென்டிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement