ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியர்!

2

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக ஆங்கிலம் கற்றுத்தரும், 'சூப்பர்நோவா' என்ற நிறுவனத்தின் உரிமையாளரான திண்டுக்கல்லை சேர்ந்த மகரிஷி:

அப்பா வங்கி ஊழியர். பிளஸ் 2 முடித்ததும், ஜே.இ.இ., தேர் வில் வெற்றி பெற்றேன். சென்னை ஐ.ஐ.டி.,யில், அப்போது புதிதாக, 'இன்ஜினியரிங் டிசைன் கோர்ஸ்' அறிமுகமானது; அதில் சேர்ந்தேன்.

அங்கு நவீன் என்ற நண்பன் கிடைத்தான். படிப்பு முடிந்ததும், மருந்து டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.

அங்கு, 'சாப்ட்வேர் டெவலப்பர்' முதல், 'பிசினஸ் டெவலப்மென்ட்' வரை அனைத்தும் செய்தேன். மூன்று ஆண்டுகளில், 120 கோடி ரூபாய் விற்பனை செய்யும் அளவுக்கு நிறுவனம் வளர்ந்தது.

அந்த நிறுவன உரிமையாளரான அனிருத், எனக்கு முதலாளியாக இருந்தாலும், சக நண்பராகவும் இருந்தார். ஒரு கட்டத்தில், அந்த நிறுவனத்தை வேறு ஒரு பெரிய நிறுவனம் விலைக்கு வாங்கியது.

அதனால் நான், என் நண்பன் நவீன் மற்றும் அனிருத் மூன்று பேரும் சேர்ந்து, ஏதாவது செய்ய திட்டமிட்டோம். நான், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன்.

ஆங்கிலம் கற்றுக் கொள்ள நிறைய சிரமப்பட்டிருக்கிறேன். ஐ.ஐ.டி.,க்குள் நுழையும்போதே மிரண்டு போயிருக்கிறேன்.

இதே அனுபவம், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இருக்கிறது. பக்கத்திலேயே உட்கார்ந்து ஒரு டீச்சர் மாதிரி ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க ஒரு சாப்ட்வேர் உருவாக்க நினைத்தோம்.

செயற்கை நுண்ணறிவான, ஏ.ஐ., அதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்டு வந்தது. ஓராண்டு காலம் சாப்ட்வேரில் வேலை பார்த்தோம். அழகான ஏ.ஐ., டீச்சர் பிறந்தாங்க; 'நோவா' என பெயரிட்டோம்.

நாங்கள் எதிர்பார்த்த கதவுகள் திறந்தன. கிராமப்புறங்களில் கூட நோவாவுக்கு வரவேற்பு இருக்கிறது.

தற்போது ஹிந்தி, கன்னடம், மராத்தி, குஜராத்தி வழியாகவும் ஆங்கிலம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

ஒன்றாம் வகுப்பு மாணவர் முதல், 70 வயது முதியவர் வரை நோவா வாயிலாக ஆங்கிலம் கற்றுக் கொள்கின்றனர்.

அடுத்து கணிதம், அறிவியலை கற்றுக் கொடுக்க முடியுமா என, ஆய்வு செய்து வருகிறோம்.

அது நடந்து விட்டால், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியர் என்ற கனவு நிறைவேறி விடும். அரசு பள்ளிகளுக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.

Advertisement