அனைத்து ஆயுதப்படையினர் அடங்கிய 'ருத்ரா' குழு: அறிவித்தார் ராணுவ தளபதி

3

கார்கில்: “அனைத்து ஆயுதப்படையினரும் அடங்கிய, 'ருத்ரா' குழு விரைவில் அமைக்கப்படும்,” என, ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

கடந்த, 1999ல், நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில், நாம் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க, ஜம்மு - காஷ்மீரில் உள்ள கார்கிலுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி நேற்று சென்றார்.

அங்கு, டிராஸ் பகுதியில் அமைந்திருக்கும் கார்கில் வெற்றி நினைவு தூணில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அவர் மலரஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நம் நாட்டு ராணுவம் தற்போதைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது மட்டுமல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நவீனமயத்துக்கு மாறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'ருத்ரா' என்ற பெயரில் அனைத்து ஆயுதப்படையினரும் அடங்கிய குழு உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கப்பட்ட தளவாடங்களுடன், இந்த குழுவுக்கு சிறப்பு போர் பயிற்சி அளிக்கப்படும். இதேபோல், எல்லையில் உள்ள எதிரிகளை சமாளிக்க, சுறுசுறுப்பான மற்றும் மிகவும் ஆபத்தான சிறப்பு படைப்பிரிவான, 'பைரவ்' லைட் கமாண்டோ பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நவீன ரக ஆயுதங்களை பயன்படுத்த இந்தப் பிரிவுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

@block_B@ ராணுவ வீரர்களுக்கு சட்ட உதவி ராணுவ வீரர்கள், நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் சட்டப் பிரச்னைகளை கையாள ஏதுவாக, 'நால்சா வீர் பரிவார் சஹாயத யோஜனா 2025' திட்டம் நேற்று துவங்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த விழாவில், இந்த திட்டத்தை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சூர்யகாந்த் துவக்கி வைத்தார். ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். “நாட்டை காக்கும் வீரர்களுக்கு, சட்ட ரீதியாக உதவும் வகையில், இந்த திட்டம் இருக்கும். உள்ளூரில் பதிவு செய்யப்பட்ட சொத்து தகராறு, குடும்ப பிரச்னை, நில விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை, நாட்டில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் ராணுவ வீரர்கள் கையாள முடியும்,” என, நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார். எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் காவல் படை, இந்தோ - திபெத் எல்லை காவல் படை உட்பட அனைத்து துணை ராணுவப் படையினரும் இந்த சட்ட உதவியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.block_B

Advertisement