ரோடு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

சோழவந்தான்: 'சோழவந்தான் அருகே தென்கரையில் விவசாய நிலங்களுக்கு செல்ல ரோடு அமைக்க வேண்டும்' என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய சங்கத் தலைவர் அழகுமலை கூறியதாவது:

தென்கரை கண்மாய்க்குச் செல்லும் மெயின் ரோட்டில் இருந்து குடமுட்டி மதகுவரை 3 கி.மீ.,க்கு மண் ரோடு உள்ளது. இப்பகுதியில் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு சாகுபடி பணிகளுக்காக வாகனங்கள் மண் ரோட்டில் செல்ல முடியாத நிலை உள்ளது.

மழைக்காலங்களில் ரோடு சேறு, சகதியுடன் மிகவும் மோசமாகி விடுகிறது. இதனால் வாகனங்கள் 5 கி.மீ., சுற்றிச் செல்கின்றன. மழைக்காலங்களில் துரிதமாக அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாததால் பயிர்கள் மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

பல ஊர்களில் முதலமைச்சர் நிதியில் ரோடு அமைத்து தரப்பட்டுள்ளது. இதேபோன்று இங்கும் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் பலதரப்பிலும் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement