போலி துாதரின் 162 நாட்டுப்பயணம்,ரூ.300 கோடி மோசடி: அதிரடிப் படை போலீசார் அதிர்ச்சி

2

காஸியாபாத்: போலி துாதரகம் நடத்திய ஹர்ஷவர்தன் ஜெயின், 2005ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரையில் 162 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரூ.300 கோடி மோசடி செய்ததை உத்திரபிரதேச சிறப்பு அதிரடி படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

உ.பி., மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷவர்தன் ஜெயின் என்பவர், உத்தர பிரதேசத்தின் காஸியாபாத்தில் போலி துாதரகம் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற சிறப்பு போலீசார், ஆடம்பர கார்களுடன் வலம் வந்த அவரை கைது செய்தனர்.
இவர், உலகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத நாடுகளின் துாதர் என்று கூறிக்கொண்டு, பலரையும் ஏமாற்றியுள்ளார். யாருமே கேள்விப்படாத நாடுகளின் பெயரில் துாதரகம் அமைத்துக் கொண்டு வேலை வாங்கித்தருவதாகவும், வர்த்தகம் ஏற்பாடு செய்வதாகவும் கூறி பலரையும் மோசடி செய்துள்ளார்.

இவர், 162 நாடுகளுக்கு பயணம் செய்ததும், 25 போலி நிறுவனங்கள் நடத்தியதும், ரூ.300 கோடி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. அவர், 2005 மற்றும் 2015 க்கு இடையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 54 முறையும், இங்கிலாந்துக்கு 22 முறையும் சென்றுள்ளார். இந்த விவரங்களை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹர்ஷ்வர்தன் ஜெயினை காவலில் வைக்க எஸ்.டி.எப் நீதிமன்றத்தை அணுகியுள்ளது, நாளை விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணையில் அவரது உலகளாவிய பல மோசடிகள் வெளிப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement