உலக கோப்பை செஸ் பைனலின் 2வது சுற்றும் டிரா; நாளை டை பிரேக்கரில் ஹம்பி - திவ்யா மோதல்

ஜார்ஜியா: உலக கோப்பை செஸ் பைனலில் இந்திய வீராங்கனைகள் ஹம்பி - திவ்யா மோதிய 2வது சுற்றும் டிராவில் முடிந்தது. இதனால், டை பிரேக்கர் சுற்றின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட உள்ளார்.



ஜார்ஜியாவில் பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் பைனலுக்கு ஹம்பி 38, திவ்யா 19, என இரு இந்திய வீராங்கனைகள் முன்னேறி, புதிய வரலாறு படைத்தனர். தவிர, உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ், 2026) பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர்.


இரண்டு போட்டி கொண்ட பைனலின் முதல் சுற்றுப் போட்டி நேற்று (ஜூலை 26) நடந்தது. 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சம நிலையில் இருந்ததால், ஆட்டம் 2வது சுற்றுக்கு சென்றது.


இன்று நடந்த 2வது சுற்றும் சமனில் முடிந்தது. இதனால், ஆட்டம் டை பிரேக்கர் சுற்றுக்கு சென்றது. வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவரே புதிய சாம்பியன் ஆவார்.


டை பிரேக்கர் எப்படி?





டை பிரேக்கர் சுற்று, ரேபிட் போட்டிகளாக நடத்தப்படும்.

டை பிரேக்கர் சுற்றின் ஒவ்வொரு ரவுண்டும் இரு ஆட்டங்களாக நடைபெறும்.

கறுப்பு காய்களுடன் ஒரு முறையும், வெள்ளை காய்களுடன் ஒரு முறையும் இரு வீரர்களும் விளையாடுவார்கள்.

டை பிரேக்கரின் முதல் ரவுண்டில் இரு வீரர்களுக்கு தலா 25 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் தலா 10 வினாடிகள் கூடுதலாக வழங்கப்படும்.

இதிலும், வெற்றியாளரை தீர்மானிக்க முடியவில்லை எனில், டை பிரேக்கரின் 2வது சுற்றிலும் இரு ஆட்டங்கள் நடத்தப்படும். அதில் ஒவ்வொரு வீரருக்கும் தலா 10 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக 5 வினாடிகள் வழங்கப்படும்.

அதுவும் டிராவில் முடிந்தால் டை பிரேக்கர் சுற்றின் 3வது ஆட்டம் நடைபெறும். அதில் இரு வீரர்களுக்கு தலா 5 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கு 3 வினாடிகள் கூடுதலாக வழங்கப்படும்.

இதுவும் டிராவில் முடிந்தால் கடைசியாக சடன் டெத் என்ற முறையில் ஆட்டம் நடக்கும். அதில் ஒரேயொரு போட்டி மட்டுமே நடக்கும்.

Advertisement