ராணுவ தலைமை தளபதி சியாச்சின் பயணம்; ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறை

1

லடாக்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, சியாச்சின் சென்றுள்ளார். அங்கு, 18 ஜம்மு காஷ்மீர் ரைபிள் படை பிரிவு வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி இந்திய ராணுவம் வெற்றி பெற்ற நிலையில், முதல்முறையாக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சியாச்சின் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.


உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக காணப்படும் சியாச்சின் பனிமலை, ஏறக்குறைய 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. 75 கி.மீ நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும் கொண்டது.


இந்தப் பயணம் அவருக்கு மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். ஏனெனில், இதே பட்டாலியனில் அவர் ஒரு இளம் அதிகாரியாக தனது ராணுவ வாழ்க்கையைத் தொடங்கியதோடு, பின்னர் இதன் தளபதியாகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.


மேலும், தான் தளபதியாக இருந்த போது, தனக்கு கீழ் பணியாற்றிய 7 ஜூனியர் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

இது குறித்து இந்திய ராணுவம் விடுத்துள்ள பதிவில், "ஒரு நெகிழ்ச்சியான தருணம். ராணுவ தலைமை தளபதி தனது பழைய படைவீரர்களுடன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்." எனக் குறிப்பிட்டுள்ளது.

Advertisement