திருநெல்வேலியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு: 17 வயது சிறுவன் காயம்

11


திருநெல்வேலி: பாப்பாக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 17 வயது சிறுவன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எஸ்.ஐ., இருதரப்பினர் மோதலை தடுக்க முயற்சித்தார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் எஸ்.ஐ., முருகன் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவரது வீட்டில் பதுங்கி கொண்டார்.


அப்போது 17 வயது சிறுவன் ஒருவரை எஸ்.ஐ., முருகன் பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட மோதலில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த சிறுவன் காயம் அடைந்தான்.


சம்பவத்தில், எஸ்.ஐ., முருகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, சிறுவன் மற்றும் போலீஸ் எஸ்ஐ ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது குறித்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கூறியதாவது: பாப்பாக்குடியில் எஸ்ஐ முருகன் இருதரப்பு மோதலின் போது, அங்கிருந்தவர்களின் உயிரையும் உடமையும் காப்பாற்றும் நோக்கில் தற்காப்புக்காகவும் துப்பாக்கியால் சுட்டார். அதனை தொடர்ந்து இளம் சிறார்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.


இந்த சம்பவத்தில் காயமுற்ற ஒரு 17 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னொருவரும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளஞ்சிறார்கள் மீதும் ஏற்கனவே பாப்பாக்குடி போலீஸ் ஸ்டேஷனில் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. குறிப்பாக தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசியது உட்பட நான்கு வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement