மக்களை ஏமாற்ற மருத்துவமனையில் நாடகம்: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

காரைக்குடி: ''மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதும் டேபிள் வைத்து மீட்டிங் போட்டு, மக்களை ஏமாற்ற நாடகம் போடுகிறார் முதல்வர் ஸ்டாலின்,'' என்று காரைக்குடி பிரசாரத்தில், இபிஎஸ் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். காரைக்குடியில் அவர் பேசியதாவது:
காரைக்குடிக்கு என்று ஒரு வரலாறு உண்டு, வள்ளல் அழகப்பச் செட்டியார் என்றால் நாடே அறியும். அவருக்குச் சொந்தமான 1000 ஏக்கர் நிலத்தைக் கல்விக்காகக் கொடுத்தவர். அதனாலே அழகப்பா பல்கலைக்கழகம் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் கொண்டுவரப்பட்டது.
செட்டிநாடு என்று பெருமையோடு அழைக்கப்படும் காரைக்குடி, வணிகர்கள் நிறைந்த பகுதி. கட்டிடக் கலைக்கு சிறப்பு பெற்றது. இந்த மாநகராட்சியிலும் நிறைய ஊழல்கள் நடந்துள்ளது. இங்கிருக்கும் மேயர் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை குறைந்த வாடகைக்கும் குத்தகைக்கும் விட்டுள்ளார்.
அவர் பொறுப்புக்கு வந்ததே கொள்ளையடிக்கத்தான். மேயர் தன்னிச்சையாக மாநகராட்சி தீர்மானம் இல்லாமலேயே 30 கோடி ரூபாய்க்கு வேலை ஒதுக்கியிருப்பதாகத் தகவல் சொல்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதனை விசாரித்து, தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
தேர்தல் அறிக்கையில் எந்த வரியும் உயர்த்த மாட்டேன் என்று அறிவித்துவிட்டு உயர்த்திவிட்டனர். குப்பைக்கு வரி போட்டுவிட்டனர். மின்கட்டணமும் மூன்றாண்டுகளில் 67% உயர்த்திட்டாங்க.
இப்போது தற்காலிக மின்சார துறை மந்திரி சிவசங்கர் என்னை கிண்டலடித்துப் பேசுகிறார். நீங்களே பாருங்கள். அதிமுக ஆட்சியில் எவ்வளவு பில் கட்டினார்கள் என்பதையும் இப்போது எவ்வளவு கட்டுகிறார்கள் என்பதையும் காட்டுகிறோம்.
பெரிய தொழிற்சாலைகள் மின்கட்டண உயர்வால் அண்டை மாநிலத்துக்குச் செல்கிறது.
எல்லாவற்றையும் உயர்த்திவிட்டு கடன் வாங்குறாங்க. எதுக்கு கடன் வாங்குறாங்கன்னு தெரியலை.
அதிமுக ஆட்சி அமைந்ததும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டும். மாநகராட்சியில் ஆரம்பித்து ஊராட்சி வரை கொள்ளை அடிக்கிறாங்க. கொள்ளையடிப்பதில் முதல் மாநிலம் தமிழ்நாடு.
கிராமத்து தோட்டத்தில் அனுமதியில்லாமல் வீடு கட்டினால் சீல் வைப்பார்களாம். டீ கடை முதல் அனைத்து தொழிலுக்கும் லைசென்ஸ் வாங்கணுமாம். நாங்கள் பொய் பேசவில்லை, பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. இந்தக் கொடுமை எங்காவது உண்டா? இப்படிப்பட்ட ஆட்சி தேவையா?
தையல் கடை, சலவை கடை, பெட்டி கடை எல்லாவற்றுக்கும் லைசென்ஸ் வாங்கணுமாம். யாரால் தாங்க முடியும்? யார்தான் ஐடியா கொடுக்கிறார். கிராம மக்கள் என்ன தப்பு செஞ்சாங்க. அப்புறம் சிசிடிவி பொருத்தணுமாம். ஒரு கேமராவின் செலவுதான், கடையின் முதலீடாக இருக்கிறது. ஏழைகளைப் பாதிக்கும் அளவு மோசமான சட்டம் கொண்டுவந்த அரசு இனியும் தொடர வேண்டுமா?
உங்களுடன் ஸ்டாலின் என்று ஊர் ஊராக அரசு ஊழியரைப் பயன்படுத்தி நோட்டீஸ் கொடுக்குறார்கள். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருக்கிறது என்பது இப்போது தான் தெரிகிறதாம், அவரே இதனை ஒப்புக்கொண்டார். 45 நாட்களில் தீர்வு காணலாம் என்கிறார். அதாவது ஆட்சி முடியும்போது தந்திரமாக மக்களை ஏமாற்றுகிறார். 'தினமும் ஒரு அறிக்கை, திட்டம், அதுக்கு ஒரு பெயர் வைப்பார். அது மட்டும்தான் ஸ்டாலின் செய்வார்.
ஸ்டாலினுக்கு உடல் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது அங்கேயே டேபிள் வைத்து மீட்டிங் போடுகிறார். 18 நாள் வெளிநாடு போய் சைக்கிள் ஓட்டிய நேரத்தில் ஏன் அரசுப் பணியை கவனிக்கவில்லை? மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதும் மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின். மக்கள் இதற்கு மயங்க மாட்டார்கள். வெளிநாட்டுக்குப் போய், தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபரை அழைத்து அங்கு வைத்து ஒப்பந்தம் போடுறார். இப்படிப்பட்ட முதல்வர் நாட்டுக்குத் தேவையா?
திமுக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் விழ ஆரம்பித்துவிட்டது, தேர்தல் நேரத்தில் கூட்டணி இருக்குமா இல்லையா என்ற சூழல் நிலவுகிறது.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.










மேலும்
-
இந்தியாவில் 3 ஆண்டுகள் முன்பே பதுங்கிய பஹல்காம் பயங்கரவாதிகள்: வெளியான புதிய தகவல்
-
காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் தமிழர் பூபாலனுக்கு கூடுதல் பொறுப்பு
-
'பாரத் கவுரவ்' கர்நாடகாவில் இருந்து காசி தரிசனம் 'தட்சிண யாத்திரை' ரயிலில் சுற்றுலா
-
கணவரை கொலை செய்த மனைவி ஓராண்டுக்கு பின் கள்ளக்காதலனுடன் கைது
-
சென்னை - பெங்., விரைவு சாலை சுங்க கட்டணங்கள் அறிவிப்பு