வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் நகராட்சி அலுவலர்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டு, முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் நவீனா, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி காளீஸ்வரி. காளீஸ்வரியின் தந்தை துரை கண்ணன் தனது மகள் காளீஸ்வரி பெயருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சொத்துக்களை எழுதி தந்துள்ளார். அதன்படி காளீஸ்வரி பெயருக்கு வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்கு காளீஸ்வரியின் கணவர் செல்வ குமார் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உள்ளார்.
அங்கிருந்த வருவாய் உதவியாளர் நவீனா என்பவர் பெயர் மாற்றம் செய்வதற்கு உயர் அதிகாரிகள் தெரிவித்தபடி 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர கேட்டுள்ளார். முதல் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுத்து பெயர் மாற்றம் செய்வதில் உடன்பாடு இல்லாத செல்வகுமார், தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்தார் .
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, எஸ்.ஐ. தளவாய் மற்றும் சுந்தரவேல், பாண்டி, கோமதி, முத்து, ஷியாம் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்து மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
மேலும் செல்வகுமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயன பவுடர் தடவிய பத்தாயிரம் ரூபாயை பில் கலெக்டர் நவீனா வாங்கிக்கொண்டார். செல்வகுமாரிடமிருந்து லஞ்சப்பணத்தை அவர் பெற்றபோது போலீசார் கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது வருவாய் உதவியாளர் நவீனா கண்ணீர் விட்டு அழுது, 'உயர் அதிகாரிகள் சொன்னதால்தான் வாங்கினேன்' என தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை தலைமையிலான போலீசார் வருவாய் உதவியாளர் நவீனாவை கைது செய்து, லஞ்சத்தில் பங்கு வாங்கும் உயர் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









மேலும்
-
ஓட்டு கணக்கு ஆரம்பமா? தி.மு.க. அமைச்சரின் பரிசுப்பொருள் விநியோகம் சமூக வலைதளங்களில் வைரல்
-
இந்தியாவில் 3 ஆண்டுகள் முன்பே பதுங்கிய பஹல்காம் பயங்கரவாதிகள்: வெளியான புதிய தகவல்
-
காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் தமிழர் பூபாலனுக்கு கூடுதல் பொறுப்பு
-
'பாரத் கவுரவ்' கர்நாடகாவில் இருந்து காசி தரிசனம் 'தட்சிண யாத்திரை' ரயிலில் சுற்றுலா
-
கணவரை கொலை செய்த மனைவி ஓராண்டுக்கு பின் கள்ளக்காதலனுடன் கைது