டிஜிட்டல் கைது மோசடி: பெண் டாக்டரை ஏமாற்றி ரூ.19 கோடி பறிப்பு

1

ஆமதாபாத்: குஜராத்தில் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கிய மூத்த பெண் டாக்டரை ஏமாற்றி சைபர் மோசடியாளர்கள் ரூ.19 கோடி பறித்துள்ளனர்.

சமீபகாலமாக, டிஜிட்டல் கைது மோசடி என்ற பெயரில் சைபர் மோசடியாளர்கள் அதிகாரிகள் போல் நடித்து, பணம் பறிப்பது தொடர்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சைபர் மோசடி தொடர்ந்து வருகிறது. குஜராத்தில் ஒரு மூத்த பெண் டாக்டர் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி, தனது சேமிப்பு பணமான ரூ.19 கோடியை இழந்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் மூத்த பெண் டாக்டருக்கு, மார்ச் 15ம் தேதி போன் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் தொடர்பு கொண்டவர், 'உங்கள் போனில் சட்டத்திற்கு புறம்பான தகவல்கள் இருக்கின்றன. அதனால் உங்களது போன் இணைப்பு துண்டிக்கப்படும். உங்கள் மீது பண மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என்று கூறி அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரி, அரசு வழக்கறிஞர் என்று கூறி தொடர்ந்து அந்த டாக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு இறுதியாக, 'உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். நீங்கள் எங்கு சென்றாலும் எங்களிடம் போனில் தொடர்புகொள்ளவேண்டும்' என்று மிரட்டி உள்ளனர்.

பயந்துபோன அந்த டாக்டர், தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் வீடியோ அழைப்புகள் மூலம் மோசடி செய்பவர்களுக்கு தனது இருப்பிடத்தை தெரிவித்தார்.

அவர்கள் கூறிய 35 வங்கி கணக்குகளில் கேட்ட பணத்தை மாற்றி உள்ளார். மேலும் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று தொகையையும் அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கில் செலுத்தினார். இந்நிலையில் அவருக்கு வந்த போன் அழைப்புகள் திடீரென நிறுத்தப்பட்டன.


இந்த மோசடி சம்பவம் 3 மாத காலமாக தொடர்ந்து இருக்கிறது. இதில் மொத்தம் ரூ.19 கோடியை இழந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என உணர்ந்து தனது உறவினரிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளார்.

சைபர் மோசடியாளர்கள் உங்களை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் சொன்ன பிறகு, பாதிக்கப்பட்ட டாக்டர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் குஜராத்தில் உள்ள சிஐடி சைபர் செல் குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்தது.இது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:

இந்த சம்பவத்தில் சூரத்தில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டார். அங்கு அவரது வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி கண்டுபிடிக்கப்பட்டது. கைதானவர் மூலம் சைபர் மோசடி நெட்வொர்க்கை கண்டுபிடித்து, மோசடி தொடர்பாக மேலும் கூடுதல் நபர்களை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது.


இந்த விரிவான நடவடிக்கையின் பின்னணியில் உள்ள மூளையாக செயல்பட்டவர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் பணி, அவர்களின் டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில் நடந்து வருகிறது.

பணத்தின் ஒரு பகுதி மட்டுமே சந்தேக நபரின் கணக்கில் உள்ளது. மீதமுள்ள பணத்தை கண்டறியும் முயற்சி நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement