'பாகிஸ்தானின் அணு ஆயுத பூச்சாண்டி இந்தியாவிடம் எடுபடாது'

''ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மொத்தமே, 22 நிமிடங்கள் தான். அதில், பாகிஸ்தானுக்கு முழு தண்டனையும் தரப்பட்டுவிட்டது. பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டுமென யாராவது விரும்பினால் பிரதமர் மோடியிடம் அது நிச்சயம் நடக்காது. பாகிஸ்தானின் அணு ஆயத பூச்சாண்டியெல்லாம் இந்தியாவிடம் இனியும் எடுபடாது. இது மோடியின் புதிய இந்தியா. இங்கு வாலாட்டினால் பதிலடி நிச்சயம்,'' என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
'ஆப்பரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: போரில் வீர மரணம் அடைந்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த நம் வீரர்களுக்கு என் அஞ்சலி. 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை துவங்கும் முன், நம் ராணுவத்தினர் ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக ஆராய்ந்தனர். பல்வேறு கோணங்களில் யோசித்து, பயங்கரவாதிகளுக்கு அதிக அளவில் எவ்வாறு சேதங்களை ஏற்படுத்த முடியும் என்பதை கணித்துவிட்டே தாக்குதலை ஆரம்பித்தனர்.
மொத்தமே, 22 நிமிடங்கள்தான். பாகிஸ்தானுக்கு முழு தண்டனை தரப்பட்டுவிட்டது. 'லாகூருக்கு பஸ்' என்ற மொழியில், பேசிப் பார்த்தோம். அதை பாகிஸ்தான் புரிந்து கொள்ளவில்லை. அதனால், அவர்களுக்கு புரியக்கூடிய, 'பாலகோட்' மொழியிலேயே, பாடம் நடத்தப்பட்டது. நெருக்கடி காரணமாக, 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.
அரசியல் மற்றும் ராணுவ அடிப்படையில் அமைந்த நோக்கங்களுக்காக மட்டுமே நிறுத்தப்பட்டது. மேலும், நடவடிக்கையை எதற்காக ஆரம்பித்தோமோ, அதை நாம் சாதித்துவிட்டதாலேயே நிறுத்திக் கொண்டோம். மேலும், போரை நிறுத்துவது தொடர்பாக, பாகிஸ்தான் அதிகாரிகள்தான், முதலில் நம்மை தொடர்பு கொண்டனர். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றியா என்று, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் 'ஆமாம்' என்பது மட்டுமே.
பரிட்சையின் முடிவுதான் முக்கியம். பரிட்சையின்போது, பேனா தொலைந்துவிட்டது, பென்சில் முனை உடைந்துவிட்டது என்பதெல்லாம் முக்கியமல்ல. முடிவு தான் முக்கியம்.இந்தியாவை ஆயிரம் தடவை வெட்டிவிடலாம் என்ற கனவில், பாகிஸ்தான் இருந்தது. இனி, அந்த கனவை மறந்துவிட வேண்டும். இது, மோடியின் புதிய இந்தியா. இங்கு, சரியான பதிலடி தரப்படும்.
தர்மத்தை காக்க வேண்டுமெனில், இறுதியாக சுதர்சன சக்கரத்தை கையில் எடுக்கலாம் என்கிறார் பகவான் கிருஷ்ணர். 2006ல் பார்லிமென்ட் தாக்குதலை சந்தித்தோம். 2008ல் மும்பை தாக்குலை சந்தித்தோம். இனியும் வேண்டாம். போதும் என்று தீர்மானித்த பிறகே, இறுதியாக சுதர்சன சக்கரத்தை கையில் எடுத்தோம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளிகள் கொல்லப்பட்டுவிட்டனர். சம்பவத்துக்கு மூளையாக இருந்தவனை, நம் படையினர் தீர்த்துக்கட்டிவிட்டனர். இதில், சுலைமான் என்ற ஹசிம் மூஸா பஜி என்பவன்தான் முக்கியமானவன். லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த சதிகாரன். அவனையும், அவனோடு சேர்ந்த அபு ஹம்சா மற்றும் யாசிர் என மூன்று தீவிரவாதிகளையும், ஸ்ரீநகருக்கு அருகில் நடந்த என்கவுண்ட்டரில் நம் படையினர் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டுமென யாராவது விரும்பினால், அது பிரதமர் மோடியிடம் நிச்சயம் நடக்காது. பாகிஸ்தானின் அணு ஆயத பூச்சாண்டியெல்லாம் இந்தியாவிடம் இனியும் எடுபடாது.இவ்வாறு, அவர், பேசினார்.
@block_P@
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் பொறுப்பேற்க வேண்டும். சீனாவிடம் இருந்து, பாகிஸ்தான் எவ்வளவு ஆதரவை பெற்றது என்பது தெரிந்தாக வேண்டும். இதையெல்லாம், முப்படைத் தளபதி கூற வேண்டாம். மத்திய அரசிடம் இருந்துதான் இந்த நாடு பதிலை எதிர்பார்க்கிறது.
யாரிடம் அடிபணிந்து போர் நிறுத்தம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
யாரிடம் சரண் அடைந்தேன் என்பதை பிரதமர் கூற வேண்டும். நாங்கள் அரசின் எதிரிகள் அல்ல. அதே நேரம், 'ஆப்பரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையில் நடந்த உண்மைகளை தெரிந்து கொள்ளும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. -கவுரவ் கோகோய் லோக்சபா எதிர்க்கட்சித் துணைத் தலைவர், காங்.,block_P
-நமது டில்லி நிருபர்-














மேலும்
-
வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் நகராட்சி அலுவலர்!
-
மக்களை ஏமாற்ற மருத்துவமனையில் நாடகம்: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
-
போரை நிறுத்தும்படி எந்த உலகத்தலைவரும் சொல்லவில்லை : பிரதமர் மோடி திட்டவட்டம்
-
விமானப் பயணத்திற்கு இடையூறு: பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
டிஜிட்டல் கைது மோசடி: பெண் டாக்டரை ஏமாற்றி ரூ.19 கோடி பறிப்பு
-
பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை: பிரதமர் மோடி