ஒவ்வொரு வக்கீலும் நீதிபதி மீது புகார் அனுப்பினால் என்னாகும்?

77


கோவை: மதுரை வக்கீல் வாஞ்சிநாதன், ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, சுப்ரீம் கோா்ட் தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் சமூக ஊடகங்களில் வெளியானது.


கடிதம் எழுதிய வக்கீல் மீது, ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ராஜசேகர் அடங்கிய பெஞ்ச், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதை கைவிடக்கோரி, வக்கீல்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

இது குறித்து, கோவை ரேஸ்கோர்ஸ் வக்கீல் ஆர்.சண்முகம் கூறியதாவது: நீதிபதி சுவாமிநாதன் எளிமையானவர். பாரபட்சமற்ற தீர்ப்புகளை வழங்கியவர். அவரது தீர்ப்புகள் ஜாதி, மதங்களை கடந்து ஏழை எளியவர்களுக்கு நீதி தரும் விதத்தில் இருக்கின்றன.



ஒரு தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருகிறதோ, அவர் நீதிபதியை கடவுளாக நினைப்பதும், யாருக்கு சாதகமாக இல்லையோ, அவர் நீதிபதியை கல் என்று நினைப்பதும் இயல்பு. நீதிபதிகள் அதை பற்றி கவலைப்படாமல் மிகுந்த பணிச்சுமையுடன் பணியாற்றுகிறார்கள்.


எந்த வழக்கும் வக்கீலுக்கும், நீதிபதிக்கும் இடையிலான போட்டி அல்ல. இருவரும் சேர்ந்து நீதிபரிபாலனத்தை நிலைநாட்ட, அவரவர் பங்கை அளிக்கிறார்கள். தனது வழக்கை ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டாம் என்று வக்கீலுக்கு தோன்றினால், வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றுமாறு கேட்க சட்டத்தில் இடம் உள்ளது.


ஆனால் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்த வக்கீல், நீதிபதி மேல் ஒரு புகார் மனுவை, மேல்நீதிபதிக்கு அனுப்பினால், நிச்சயமாக நீதி பரிபாலனத்தில் வக்கீல் தலையிட்டதாக தான் அர்த்தம். ஒவ்வொரு வக்கீலும், நீதிபதி மீது புகார் அளிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? நீதி பரிபாலனம் எப்படி நடைபெறும்? இவ்வாறு, சண்முகம் கூறினார்.

'அரசியல் அமைப்பு சட்டத்தையே விமர்சிப்பதற்கு சமம்'




கவுசல்யா பரமேஸ்வரன்



நீதிமன்றம் நடுநிலையாக செயல்படும் என்பது தான் பொதுமக்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஒரு நாளும் பொய்த்துப் போகாது. ஒரு நீதிபதியை விமர்சிப்பது, அரசியல் அமைப்பு சட்டத்தையே விமர்சிப்பதற்கு சமம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம், எல்லோருக்கும் பொதுவானதாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை மீறி தீர்ப்பு வழங்க முடியாது. இது தவறும் எனும் போது, அரசியலமைப்பு சட்டத்தை தவறு என்று சொல்வதற்கு சமம்.


பார்த்திபன்



நீதிபதி மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. நீதிபதியை விமர்சிப்பது, நீதிமன்றத்தையே விமர்சிப்பது போலாகும். நீதிபதி தன்னிச்சையாக தீர்ப்பு வழங்க முடியாது. சட்டத்தின் அடிப்படையில் தான் செயல்பட முடியும்.



ஒரு தீர்ப்பு சரியாக இல்லை என்று ஒருவர் நினைத்தால், மேல் முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் வரை செல்ல அனுமதி இருக்கிறது. அதிலும் தீர்ப்பு சரியாக இல்லை என்றால், அவர்களையும் விமர்சிப்பார்களா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.


ராஜேந்திரன்




தாராளமாக தீர்ப்பை விமர்சிக்கலாம்; அது மட்டுமல்ல, எங்களையும் விமர்சிக்கலாம் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தவர், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

அவர், உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற 7 வருடங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள், நீதிபதிகள் ஒன்றும் கடவுள் அல்ல; நீதியே கடவுள் என்று கூறிய இவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு ஏற்க முடியாத ஒன்று.

ஹரிஹரன்



நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேர்மையான நீதிபதி என்பதில் சந்தேகம் இல்லை. இவர் ஒரு சாராருக்கு ஆதரவானவர் என்ற குற்றச்சாட்டில், எனக்கு தெரிந்தவரை உண்மையில்லை. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்தவர் இவர்.தற்போது இவருக்கு எதிராக அவதுாறு கிளப்புவது சரியில்லை. இவர் மத ரீதியாக, சாதி ரீதியாக தீர்ப்பு வழங்கி வருகிறார் என்பது ஏற்புடையதல்ல. பாகுபாடு இன்றி தான் தீர்ப்பு வழங்கிவருகிறார்.

Advertisement