ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு

8

டில்லி சிறப்பு நிருபர்


'ஓரணியில் தமிழ்நாடு' முழக்கத்தின் கீழ், பொதுமக்களிடம் ஓ.டி.பி., பெறுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்த நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக, 'ஓரணியில் தமிழ்நாடு' என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்த தி.மு.க.,வினர் பொதுமக்களிடமிருந்து ஆதார் ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை கடவுச்சொல்லை பெற்று வந்தனர்.

இதற்கு எதிராக திருபுவனத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி ராஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியன், மரியா கிளாட் அமர்வு, ஓ.டி.பி., எதற்காக கேட்கப்படுகிறது? தனி நபரின் பாதுகாப்பு விஷயங்களில் இது பிரச்னையை ஏற்படுத்தாதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு உறுப்பினர் சேர்க்கையின் போது ஓ.டி.பி., பெற இடைக்கால தடை விதித்தனர்.



இந்த உத்தரவுக்கு எதிராக தி.மு.க., தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மனுதாரரான ராஜ்குமார் தன் தரப்பு கருத்தை கேட்காமல், இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'ஓ.டி.பி., பெறும் விவகாரத்தில் பொதுமக்களை வற்புறுத்தவில்லை. மக்கள் தானாக சுய விருப்பத்தின் அடிப்படையில் தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்து வருகின்றனர்.
ஆனால், இந்த விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டுள்ளது.

Advertisement