6 இந்தியர்களுக்கு பாலியல் தொந்தரவு: குற்றத்தை ஒப்புக்கொண்டார் அதிகாரி

சிங்கப்பூர்: விசா நீட்டிப்பு தொடர்பாக, இந்தியர்கள் 6 பேருக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிங்கப்பூர் குடிவரவுத்துறை அதிகாரி கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்தின் ஆய்வாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கண்ணன் மோரிஸ் ராஜகோபால் ஜெயராம் 55, பணியாற்றி வருகிறார். இவரிடம் 25 முதல் 30 வயதுடையவர்கள் சிலர் விசா நீட்டிப்புக்காக, விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்தவர்களிடம் அந்த அதிகாரி பாலியல் சலுகைகளை லஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கூறிய நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் கடந்த 2022-23 ஆண்டில் நடைபெற்றது.
இந்த விவகாரத்தில் 2023ல் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அதே ஆண்டில் ஏப்ரலில் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில் 3 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் இது போன்ற 3 குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளது. அந்த வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 18ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட ஜெயராமிற்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.
