'கைதாகி ஜாமினில் வந்தவர் தானே'? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி

6

டில்லி சிறப்பு நிருபர்





துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரிய சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசும், துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் 'நமஸ்தே' திட்டத்தை மத்திய அரசும் செயல்படுத்தி வருகின்றன.

இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகளை முன் வைத்த 'யு டியூபரா'னசவுக்கு சங்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.



அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை' என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, 'ஏற்கனவே இதே நபர் தானே நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் கைதாகி ஜாமினில் வெளி வந்தவர்?' என தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு பதில் அளித்த சவுக்கு சங்கர் தரப்பு, 'அந்த விவகாரங்களில் நாங்கள் பொது மன்னிப்பு கேட்டு விட்டோம்' என பதில் அளித்தனர்.


அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 'பலரும் இப்படித்தான் செய்கின்றனர். ஒருவரை பற்றி அபாண்டமாக பேசிவிட்டு, பிறகு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு விடுகின்றனர். இதனால் என்ன பலன் ஏற்படப் போகிறது?' என கேள்வி எழுப்பினார்.
பின், சவுக்கு சங்கர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது,தமிழக அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Advertisement