மேயர்கள் பதவி இழப்பை தடுக்க தி.மு.க., தலைமை ரகசிய உத்தரவு

1

தஞ்சாவூர்: தஞ்சாவூர், கும்பகோணம் மேயர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தி, அவர்களை சமாதானப்படுத்துமாறு தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.



இதையடுத்து, கட்சியின் எம்.எல்.ஏ.,வும் தி.மு.க., தஞ்சை மாவட்ட செயலருமான சந்திரசேகரன், தஞ்சாவூரில் உள்ள தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்களுடம் பேச்சு நடத்தி, விபரங்களை கட்சித் தலைமைக்கு தெரிவித்துள்ளார்.



அதே போல, கும்பகோணத்திலும் தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்களிடம் ரகசியமாக பேசியுள்ளனர். தஞ்சாவூர் மாநகராட்சியில், தி.மு.க., 34, அ.தி.மு.க., எட்டு, காங்., இரண்டு உட்பட மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ளனர்.



'தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் ராமநாதன், கவுன்சிலர்களுக்கு மரியாதை தருவதில்லை; வார்டு பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை' என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள், மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ரகசிய கூட்டம் நடத்தினர்.


இதையடுத்து, தி.மு.க., தஞ்சை மாவட்டச்செயலர் சந்திரசேகரன், அதிருப்தி கவுன்சிலர்களிடம் சமாதான பேச்சு நடத்தியுள்ளார்.



இதேபோல, கும்பகோணம் மாநகராட்சியில் 48 கவுன்சிலர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் சரவணன் மீதும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, தி.மு.க., கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளனர்.



தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகளின் தி.மு.க., கவுன்சிலர்கள் திட்டம் குறித்து கட்சித் தலைமைக்குத் தகவல் போனது.



இதையடுத்து, 'இரண்டு மேயர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் திட்டமிட்டிருப்பதை முறியடிக்க வேண்டும் என்பதற்காக, தி.மு.க., தலைமை உத்தரவை அடுத்து, பேச்சு நடத்தப்பட்டுள்ளது.


இது குறித்து, தஞ்சாவூர் தி.மு.க.,வினர் கூறியதாவது:




தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் இந்த பிரச்னை உள்ளது.

தஞ்சாவூரில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மேயர் பதவிநீக்கம் செய்யப்பட்டால், மற்ற மாநகராட்சி, நகராட்சிகளிலும் மேயர் மற்றும் தலைவர்கள் மீது, அதிருப்தியாளர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவர்.



தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால், தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்களை சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தி.மு.க., தலைமை இறங்கி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement