குறுக்கு வழியில் வந்தவர் உதயநிதி: இபிஎஸ் சாடல்

20


மானாமதுரை: '' உதயநிதி குறுக்கு வழியில்தான் துணை முதல்வர் ஆனார். அவரை மக்கள் ஏற்கவில்லை. உழைத்து வந்தால் மட்டுமே புகழ் கிடைக்கும். குறுக்கு வழியில் வந்தவருக்குப் புகழ் கிடைக்காது. '' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார்.


சிவகங்கை மாவட்டம் , மானாமதுரையில் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுபயணத்தில் இபிஎஸ் பேசியதாவது: “திமுக கூட்டணி பலமான கூட்டணி என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அவர் கூட்டணியை நம்பி தேர்தலை சந்திக்கிறார். ஆனால், அதிமுக உங்களை நம்பி மக்களை நம்பி இருக்கிறது. மக்கள் தான் எஜமானர்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் தான் தேர்வு செய்கிறார்கள். ஸ்டாலின் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று பகல் கனவு காண்கிறார். உண்மையில் அதிமுக 210 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.


ஸ்டாலின், 18 நாட்கள் வெளிநாடு போய் சொந்த வேலை பார்த்தார், சைக்கிள் ஓட்டினார். இந்தியாவில் பல முதல்வர்கள் தொழில் ஈர்க்கப் போவாங்க, ஸ்டாலின் சைக்கிள் ஓட்டப்போனார். விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. நான் முதல்வராக பொறுப்பேற்றபோது வறட்சி, புயல், கொரோனா இருந்தாலும் விலைவாசி ஏறவில்லை. திமுக ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை. அதன் காரணமாகத்தான் விலைவாசி உயர்ந்தது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


அண்மையில் செவிலியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி பேசினார். அதாவது ' தாய்மாமா நன்றாகப் படித்தாராம். அதனால் டாக்டராகிவிட்டாராம். நான் நன்றாகப் படிக்கவில்லை, அதனால் துணை முதல்வராகி விட்டேன்' என்றார். அவர் குறுக்கு வழியில்தான் இந்தப் பதவிக்கு வந்தார், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சாதாரணத் தொண்டனும் பதவிக்கு வருவது அதிமுகவில் மட்டுமே நடக்கும். திமுகவில் முடியுமா? படிப்படியாக நான் இந்தப் பதவிக்கு வந்தேன். அரசியல், அதிகாரம் எல்லாவற்றிலும் கருணாநிதி குடும்பம்தான் வர முடியும். அதுபோலதான் டி.எம்.எஸ் இயக்குனர் பதவிக்கு உதயநிதியின் தாய்மாமா வந்திருக்கிறார்.


ஸ்டாலின் மனைவி துர்கா புத்தக விழாவில், ' பல்வேறு பணிகளுக்கு இடையே இதில் பங்கேற்றார் உதயநிதி' என்று புகழ்கிறார். தாய் தான் புகழ்கிறார், மக்கள் தான் புகழ வேண்டும் அதுதான் நிலையான புகழ். உழைத்து வந்தால் மட்டுமே புகழ் கிடைக்கும். குறுக்கு வழியில் வந்தவருக்குப் புகழ் கிடைக்காது.

மத்திய அரசின் குழுவில் கனிமொழி வெளிநாடுகளுக்குச் சென்றார். இப்போது பார்லிமென்டில், உளவுத்துறை முன்கூட்டியே கனித்திருந்தால் பஹல்காம் தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் என்று பேசுகிறார். வெளிநாட்டில் பேசியது என்ன…? இங்கு பேசுவது என்ன? வெளிநாடுகளுக்குச் சென்று தெளிவுபடுத்திவிட்டு, இங்குவந்து பாஜவை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் மத்திய அரசு சரியான தீர்வு கொடுத்தது. பயங்கரவாத முகாம்கள் துல்லியமாகத் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

இதுவே 1998ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் அத்வானி தமிழகம் வந்தபோது கோவையில் பல இடங்களில் குண்டு வெடித்து 56 பேர் இறந்தனர், 200 பேர் படுகாயம் அடைந்தனர். இது என்ன உளவுத்துறை பெயிலியரா?

அண்மையில் கள்ளக்குறிச்சியில் 67 பேர் விஷச்சாராயம் குடித்து இறந்தனர். 2 பேர் இறந்தபோதே சரியான நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாவட்ட கலெக்டர் தவறான தகவலை கொடுத்தார். அதன் பிறகே 67 பேர் இறந்தனர். அப்போது உளவுத்துறை என்ன செய்தது..? அப்போது சரியான ரிப்போர்ட் கொடுத்திருந்தால் பலி ஏற்பட்டிருக்காது. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement