படம், பெயர் 'மிஸ்சிங்' அன்புமணி அதிர்ச்சி

திண்டிவனம்: பூம்புகாரில், வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள மகளிர் மாநாடு குறித்த அழைப்பிதழில், அன்புமணியின் பெயர், படம் இடம்பெறாதது, அன்புமணி மற்றும் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையிலான மோதல், இதுவரையில் முடிவுக்கு வராமல், உச்சகட்டத்தை எட்டியுள்ளது.



மோதலின் உச்சகட்டமாக, ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல், கடந்த 25ல் அன்புமணி மேற்கொண்ட 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண'த்தை தடை செய்ய டி.ஜி.பி.,யிடமும், உள்துறை செயலரிடமும் ராமதாஸ் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டன.



வரும் ஆகஸ்ட் 10ம் தேதி, பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அன்புமணி பங்கேற்பார் என பா.ம.க.,வினர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மாநாட்டிற்கான அழைப்பிதழில் அன்புமணியின் பெயர் மற்றும் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.


கடந்த மே 11ம் தேதி, மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க இளைஞர் பெருவிழா மாநாட்டில், ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு இருந்த நிலையிலும், இருவரும் ஒன்றாக மேடையில் தோன்றினர்.



ஆனால், தற்போது பூம்புகாரில் நடைபெற உள்ள மகளிர் மாநாட்டு அழைப்பிதழில், பெயர், படம் இல்லாததால் மாநாட்டில் அன்புமணி பங்கேற்க மாட்டார் என, அவருடைய ஆதரவாளர்கள் கூறினர்.

Advertisement