மதுரையில் த.வெ.க., மாநில மாநாடு; தள்ளிவைக்க போலீஸ் வேண்டுகோள்

2

மதுரை: மதுரையில் ஆக., 25ல் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்கூட்டியோ அல்லது ஆக., 27க்கு பிறகோ நடத்தினால் பாதுகாப்பு அளிப்பதற்கு வசதியாக இருக்கும் என, பொதுச்செயலர் ஆனந்த்திடம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், தென்மாவட்ட ஓட்டுகளை குறிவைத்து மதுரை பாரபத்தியில் ஆக., 25ல் த.வெ.க.,வின் இரண்டாவது மா நில மாநாடு நடக்கிறது.


இதற்காக போலீஸ் அனுமதி கேட்டு, கடந்த 16ல், மதுரை எஸ்.பி., அரவிந்திடம் கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் கடிதம் கொடுத்தார்.



இதுவரை போலீஸ் அனுமதி கொடுக்கப்படா ததால், நேற்று மீண்டும் எஸ்.பி.,யை சந்தித்தார் ஆனந்த். அப்போது, போலீஸ் தரப்பில், மாநாட்டை தள்ளி வைக்கக் கேட்டுக் கொண்டதாக தகவல் பரவி உள்ளது.



இது குறித்து, மதுரை த.வெ.க.,வினர் கூறியதாவது:




வரும் 27ல் விநாயகர் சதுர்த்தி தினம் வருவதால், அதற்கு இரு நாட்களுக்கு முன்பே, மாநகர் முழுதும் ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் .


அதற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருப்பதால், ஆக., 25ல் நடத்த திட்டமிட்டிருக்கும் த.வெ.க., மாநில மாநாட்டுக்கு முழுமையான அளவில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.



அதனால், விநாயகர் சதுர்த்திக்கு பின், மாநாட்டை வைத்துக் கொள்ள முடியுமா? அல்லது ஆக., 25 முன்பாக வைத்துக் கொள்ளலாமா என த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்திடம் போலீஸ் தரப்பில் கேட்டுள்ளனர்.



உடனே முடிவெடுக்க முடியாத ஆனந்த், தலைவர் விஜயிடம் கேட்டு தெரிவிப்பதாக சொல்லி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement