திடீரென பாதை மாறும் பன்னீர்செல்வம்; மத்திய அரசுக்கு எதிராக ஆவேசம்

28

சென்னை : அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், மத்திய அரசின் தீவிர ஆதரவாளராக இருந்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தன் பாதையை மாற்றி, நேற்று மத்திய அரசை கண்டித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.



கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை தழுவிய பின், பன்னீர்செல்வத்தை, கட்சியில் இருந்து பழனிசாமி நீக்கினார். கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இரு கட்சிகளும் தனி கூட்டணி அமைத்து களம் இறங்கின.



பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற பன்னீர்செல்வம், ராமநாதபுரம் தொகுதியில், பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.



அதன்பின் அவர், தன் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.,வில் இணைய மேற்கொண்ட முயற்சிகள், தோல்வி அடைந்தன.



எனினும், பா.ஜ., கூட்டணியில் நீடித்ததுடன், ஒவ்வொரு செயலிலும், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு, அதற்கேற்ப கருத்து தெரிவித்து வந்தார். தற்போது மீண்டும் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உருவாகி உள்ளது. இதனால் பன்னீர்செல்வம் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.


இந்த சூழ்நிலையில், கடந்த 26ம் தேதி பிரதமர் மோடி, விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய துவக்க விழாவுக்காக துாத்துக்குடி வந்தார்.



அவரை வரவேற்க அனுமதி கோரி, பிரதமருக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை.


அதனால், 'இனியும் பா.ஜ.,வை நம்ப வேண்டாம். நம்மை கை கழுவிய, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை தோற்கடிப்போம்' என, பன்னீர்செல்வத்தை வலியுறுத்தி உள்ளனர். அதைத் தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவரது அறிக்கை:





'தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக, 2024 - 25ம் ஆண்டு 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என, மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

இந்நிதியை நம்பி, 65 லட்சம் மாணவ- - மாணவியர் தனியார் பள்ளிகளில், கல்வி பெற்று வருகின்றனர். இந்நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதன் காரணமாக, தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.

பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய துாய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன. மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமை சட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 25 சதவீதம் மாணவ - மாணவியரை, தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.


இது மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளில் தற்போது படித்து வரும், மாணவ - மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை, கல்வி உரிமை சட்டத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது.


எனவே, 2,151 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement