ரம்யாவுக்கு ஆபாச குறுந்தகவல்: சி.சி.பி., விசாரணைக்கு மாற்றம்

பெங்களூரு : நடிகர் தர்ஷன் ரசிகர்கள், நடிகை ரம்யாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய வழக்கு, சி.சி.பி., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை எதிர்த்து, பெங்களூரு போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

இதுகுறித்து நடிகை ரம்யா 'எக்ஸ்' பக்கத்தில், 'இந்தியாவின் சாமானிய மக்களுக்கு உச்ச நீதிமன்றம் நம்பிக்கை கதிர். ரேணுகாசாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்குமென நம்புகிறேன்' என, பதிவிட்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த தர்ஷன் ரசிகர்கள், ரம்யாவின் சமூக வலைதள பக்கங்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பினர்.

இதையடுத்து 43 பேரின் இன்ஸ்டாகிராம் கணக்கு பெயர்களை வழங்கி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ரம்யா புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க, சி.சி.பி., விசாரணைக்கு கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று உத்தரவிட்டார்.

இதற்கிடையில் தர்ஷனுக்கு எதிராக பேசுவதாகக் கூறி, கோவிலுக்கு சென்ற நடிகர் பிரதமை, தர்ஷன் ரசிகர்கள் மிரட்டி இருந்தனர். இதுகுறித்து பெங்களூரு ரூரல் எஸ்.பி., பாபாவிடம் வாய்மொழியாக பிரதம் புகார் அளித்தார். நேற்று எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்று எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தார்.

பின், அவர் கூறுகையில், ''தர்ஷனின் அதிகாரப்பூர்வ ரசிகர்களின் 500க்கும் மேற்பட்ட, இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து, எனக்கு மிரட்டல் வருகிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தேவை. இதுகுறித்து எஸ்.பி.,யிடம் புகார் செய்துள்ளேன். என் உயிருக்கு பாதுகாப்பு தேவை.

''நான் பேசுவதை தர்ஷன் ரசிகர்கள் புரிந்து கொள்வது இல்லை. அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுக்க வேண்டும். 'பிரதமுக்கு மிரட்டல் விடுக்கக் கூடாது' என, தன் ரசிகர்களுக்கு தர்ஷன் கூற வேண்டும்,'' என்றார்.

Advertisement