அதிக லாபம் ஆசைகாட்டி ரூ.20.91 லட்சம் மோசடி

காட்பாடி:முதலீடு செய்தால், ஆன்லைன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி பெண்ணிடம், 20.91 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.

வேலுார், பழைய காட்பாடியை சேர்ந்தவர் கலைச்செல்வி, 43. இவரது, 'வாட்ஸாப்' எண்ணிற்கு, 'வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும்' என தகவல் வந்தது. அதை உண்மை என நம்பி, அதிலிருந்த, 'லிங்க்' மூலமாக, வாட்ஸாப் குழுவில் இணைந்துள்ளார்.

அதில், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பது தொடர்பான விளம்பர திட்டங்கள் வந்துள்ளன. அதிலிருந்த, 'டிரேடு மொபி' என்ற மொபைல் போன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் முதலீடு செய்ய தொடங்கினார். தொடர்ந்து, பல தவணைகளாக, 20.91 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.

பின், முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முயன்ற போது, 'கூடுதலாக முதலீடு செய்தால் மட்டுமே, அப்பணத்தை திரும்ப எடுக்க முடியும்' என, அந்த குரூப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலைச்செல்வி அளித்த புகாரில், வேலுார் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement