போலீஸ் ஸ்டேஷன் வாசலில் காதல் தம்பதிக்கு அடி, உதை

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சித்தேரிகுப்பத்தை சேர்ந்தவர் முனுசாமி மகள் சந்தியா, 19; ஈரோட்டில் உள்ள பஞ்சு மில்லில் வேலை பார்த்தார். சில நாட்களுக்கு முன் ஊர் திரும்பியவரை, 25ம் தேதி முதல் காணவில்லை. முனுசாமி புகாரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில், சந்தியா, பெரியகண்டிங்குப்பத்தை சேர்ந்த காதலன் சதீஷை திருமணம் செய்து, நேற்று பாதுகாப்பு கோரி விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளிக்க வந்தார்.

அப்போது, வாசலில் நின்றிருந்த சந்தியாவின் குடும்பத்தினர், சதீஷிடம் தகராறு செய்து, இருவரையும் அடித்து உதைத்ததால் பரபரப்பு நிலவியது.

போலீசார், காதல் தம்பதியை மீட்டனர். சந்தியா விருப்பத்தின் படி, அவரை கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். காதல் தம்பதியை தாக்கியதாக சந்தியாவின் சகோதரிகள் மீனா, 32, லேனா, 35, ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement