நியூசிலாந்து அணி அபார பந்துவீச்சு: 149 ரன்னுக்கு சுருண்டது ஜிம்பாப்வே

புலவாயோ: நியூசிலாந்து பவுலர்கள் அசத்த, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னுக்கு சுருண்டது.

ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புலவாயோவில் நடக்கிறது.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஜிம்பாப்வே அணிக்கு மாட் ஹென்றி தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' பிரையன் பென்னட் (6), பென் கர்ரான் (13), சிக்கந்தர் ராஜா (2) வெளியேறினர். சீன் வில்லியம்ஸ் (2) ஏமாற்றினார். நிக் வெல்ச் (27), கேப்டன் கிரெய்க் எர்வின் (39), டிசிகா (30) ஓரளவு கைகொடுத்தனர். தொடர்ந்து அசத்திய ஹென்றி பந்தில் நியூமன் நியாம்ஹுரி (9), முசராபானி (1) அவுட்டாகினர்.
ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி 6, நாதன் ஸ்மித் 3 விக்கெட் சாய்த்தனர்.


பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே, வில் யங் ஜோடி நம்பிக்கை தந்தது. அபாரமாக ஆடிய கான்வே, டெஸ்ட் அரங்கில் தனது 12வது அரைசதம் விளாசினார். ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 92/0 ரன் எடுத்திருந்தது. வில் யங் (41), கான்வே (51) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement