இந்திய நலன்களில் சமரசம் இல்லை : அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

6

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் தாக்கங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.





இது தொடர்பாக, அவர் லோக்சபாவில் கூறியதாவது: உலகப் பொருளாதாரங்களுடனான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் தொடரும்போது இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கும்.


இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அறிவித்த வரி விதிப்பின் தாக்கங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்றுமதியாளர்கள், மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்னை குறித்த அவர்களின் மதிப்பீடு குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறோம்.

3வது நாடாக மாறும்

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இருப்பினும், முக்கிய நலன்களில் இந்தியா சமரசம் செய்ய வாய்ப்பில்லை.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறும்.

பிரகாசமான இடம்

தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது. சீர்திருத்தங்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கடின உழைப்பின் அடிப்படையில், சில ஆண்டுகளில் இந்தியா உலகின் 11வது பெரிய நாடாக இருந்து 5வது பெரிய நாடாக முன்னேற்றம் கண்டது.
உலகளாவிய நிறுவனங்களும் பொருளாதார வல்லுநர்களும் இந்தியாவை உலகப் பொருளாதாரத்தில் ஒரு பிரகாசமான இடமாகப் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement