கோலாரை சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை கண்டிராத புது வகை ரத்தம்

2

கோலார்: உலகில் வேறு யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை, கோலாரின் 38 வயது பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், கடந்த ஆண்டு இதய நோயால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது ரத்த வகை, 'ஓ பாசிட்டிவ்' என, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஆனால், அப்பெண்ணின் ரத்தத்தை பரிசோதித்த போது, அதன் வகை குறித்து தெளிவாக தெரியவில்லை. அவசர நிலையை உணர்ந்த டாக்டர்கள், வேறு வழியின்றி மிகுந்த எச்சரிக்கையுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதற்கிடையில், அவரது ரத்த மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கும் அவரது ரத்த வகை புதுமையாக இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் உள்ள ஐ.பி.ஜி.ஆர்.எல்., எனும் சர்வதேச ரத்தப்பிரிவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

இதன் முடிவுகள் தொடர்பாக, ரோட்டரி பெங்களூரு டி.டி.கே., ரத்த மையத்தைச் சேர்ந்த டாக்டர் அங்கித் மாத்துார் கூறியதாவது:

கோலார் பெண்ணுக்கு இருப்பது, புது வகை ரத்தம் என, ஐ.பி.ஜி.ஆர்.எல்., அங்கீகரித்துள்ளது. உலகிலேயே இந்த ரத்தம், வேறு யாருக்கும் இதுவரை கண்டறியப்படவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் இந்த வகை ரத்தம் இல்லை.

கோலார் பெண்ணின் ரத்தம் குறித்து, பிரிட்டனில் 10 மாதங்களாக விரிவான ஆராய்ச்சி செய்யப்பட்டது. மூலக்கூறு பரிசோதனையில் இது புதிய ரத்த வகை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ரத்த வகைக்கு, சி.ஆர்.ஐ.பி., என, ஐ.பி.ஜி.ஆர்.எல்., பெயர் சூட்டியுள்ளது. இதில், சி.ஆர்., என்பது குரோமர் என்பதை குறிக்கும். ஐ.பி., என்பது இந்தியா, பெங்களூரை குறிக்கும்.

கடந்த ஜூனில் இத்தாலியின் மிலனில் நடந்த சர்வதேச ரத்த மாற்ற சங்கத்தின் ஐ.எஸ்.பி.டி., 35வது பிராந்திய மாநாட்டில், புதிய வகை ரத்தம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஐ.பி.ஜி.ஆர்.எல்., வெளியிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement