ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்திய இந்திய நிறுவனங்கள்

14


புதுடில்லி: விலைச்சலுகை கிடைக்காதது, அமெரிக்க வரி விதிப்பு ஆகிய காரணங்களால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.


இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் மிகப்பெரிய வினியோகஸ்தராக ரஷ்யா திகழந்து வந்தது. இதற்கடுத்த இடங்களில் ஈராக் மற்றும் சவுதி அரேபியா இருந்தன. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போருக்கு பின், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவானது.

இதைத்தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியானது, இந்தியாவின் மொத்த எண்ணெய் கொள்முதல் சதவீதம் அதிகரித்து கொண்டே சென்றது. மற்ற எண்ணெய் வினியோகஸ்தர்களுடன் ஒப்பிடுகையில், விலை உச்ச வரம்பு மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெயை தவிர்ப்பது உள்ளிட்ட காரணங்களுடன், ரஷ்ய எண்ணெய் தள்ளுபடியில் வழங்கப்பட்டதும் இதற்கு முதன்மையான காரணமாகும்.



தற்போது, விலைச்சலுகை கிடைக்காதது, அமெரிக்க வரி விதிப்பு ஆகிய காரணங்களால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.


ரஷ்யா விலைச்சலுகையை நிறுத்திவிட்டதால், அங்கிருந்து கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய்க்கும், வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகளில் பெறப்படும் கச்சா எண்ணெய்க்கும் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை. இது குறித்து வட்டாரங்கள் கூறியதாவது:


இந்தியன் ஆயில் கார்ப், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப், பாரத் பெட்ரோலியம் கார்ப் மற்றும் மங்களூர் சுத்திகரிப்பு பெட்ரோ கெமிக்கல் லிமிமெட் ஆகியவை கடந்த ஒரு வாரமாக ரஷ்ய எண்ணெய்களை வாங்கவில்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த கச்சா எண்ணெய் கொள்முதலில் 35 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்தே வாங்கப்படுகிறது.


தங்கள் நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்குபவர்களுக்கு ரஷ்யா விலைச்சலுகை வழங்குவது வழக்கம். இந்த விலைச்சலுகையானது, தற்போது மிகக்குறைந்த அளவே வழங்கப்படுகிறது. இதுவே ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் அளவு குறைவுக்கு காரணம். இவ்வாறு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement