'அல் குவைதா' ஆதரவு பெண்ணை 'இன்ஸ்டா'வில் தொடர்ந்த 10,000 பேர்

12

பெங்களூரு: 'என்னை கைது செய்தது புனித போரின் ஒரு பகுதி' என, 'அல் குவைதா' பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜார்க்கண்ட் இளம்பெண் தெரிவித்துள்ளார்.

'அல் குவைதா' பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷாமா பர்வீன், 30, என்ற இளம்பெண்ணை, பெங்களூரு ஆர்.டி.நகர் மனோராயனபாளையாவில் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கடந்த மாதம் 29ம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குஜராத் அழைத்துச் சென்றுள்ளனர்.

முன்னதாக, பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்தில் அவரிடம் குஜராத் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் தெரிவித்த தகவல்கள் குறித்து, பெங்களூரு போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

ஷாமா பர்வீனும், குஜராத்தில் கடந்த 22ம் தேதி கைது செய்யப்பட்ட, 'அல் குவைதா' அமைப்புடன் தொடர்பில் இருந்த நான்கு பேரும், இந்திய துணை கண்டத்தில் அல் குவைதா சித்தாந்தங்களை பரப்பியதும், இந்திய முஸ்லிம்களை வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட துாண்டியதும் தெரியவந்தது.

அல் குவைதா அமைப்பின் தலைவர்கள், பயங்கரவாதம் பற்றி பேசிய வீடியோக்களை, ஷாமா பர்வீன் தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

சில முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து, ஷாமா பர்வீன் அவர்களுடன் பேசியுள்ளார். 'நீங்கள் நம் மதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளீர்கள்.

'இந்தியாவில் நமக்கு பாதுகாப்பு இல்லை. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்' என, மூளைச்சலவை செய்துள்ளார்.

ஷாமா பர்வீனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 10,000 பேர் பின்தொடர்கின்றனர். அதில், சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருக்கின்றனரா என்பது குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement