அமெரிக்க அணி சாதனை: உலக நீச்சல் போட்டியில்

சிங்கப்பூர்: உலக நீச்சல் 4x100 மீ., கலப்பு அணிகள் பிரிவில் அசத்திய அமெரிக்கா, உலக சாதனை படைத்தது.

சிங்கப்பூரில், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 4x100 மீ., 'பிரீஸ்டைல் ரிலே' பைனலில், பந்தய துாரத்தை 3 நிமிடம், 18.48 வினாடியில் கடந்த அமெரிக்க அணி, முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. தவிர இலக்கை, அதிவேகமாக கடந்து புதிய உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2023ல் ஆஸ்திரேலிய அணி, இலக்கை 3 நிமிடம், 18.83 வினாடியில் கடந்தது சாதனையாக இருந்தது. அமெரிக்கா சார்பில் ஜாக் அலெக்சி, பேட்ரிக் சம்மன், கேட் டக்ளாஸ், டோரி ஹஸ்கே பங்கேற்றனர்.

லெடிக்கி 'தங்கம்': பெண்களுக்கான 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு பைனலில் இலக்கை 8 நிமிடம், 05.62 வினாடியில் கடந்த அமெரிக்காவின் கேட் லெடிக்கி, முதலிடம் பிடித்த தங்கம் வென்றார்.

உலக சாம்பியன்ஷிப் 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் தொடர்ச்சியாக 7வது தங்கம் (2013, 2015, 2017, 2019, 2022, 2023, 2025) வென்றார் லெடிக்கி. தவிர இவர், உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் 23வது தங்கத்தை தட்டிச் சென்றார். இதுவரை 23 தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலம் என 30 பதக்கம் கைப்பற்றி உள்ளார். லெடிக்கி இன்னும் 3 தங்கம் வென்றால், அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (26 தங்கம்) சாதனையை சமன் செய்யலாம்.

வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை ஆஸ்திரேலியாவின் லானி பாலிஸ்டர் (8:05.98), கனடாவின் சம்மர் மெக்கின்டோஷ் (8:07.29) கைப்பற்றினர்.

Advertisement