7வது முறையாக திமுக ஆட்சி: உறுதி ஏற்க கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை
ஆக 7ல் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதிப் பேரணியில் திமுக-வினர் கடலென திரள வேண்டும். மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி திருவுருவச் சிலைகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மாலையிட்டு மரியாதை செலுத்திட வேண்டும். தி.மு.க., அரசின் திட்டங்களால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு பயனையாவது பெற்று முன்னேற்றம் கண்டு வருவதை நாடறியும்.
துரோகம்
கல்வியிலும் சமுதாய முன்னேற்றத்திலும் தனிநபர் வருமானத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகம் முன்னணி மாநிலமாகக் திகழ்வதை நாம் மட்டும் சொல்லவில்லை, பாஜ அரசின் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பல்வேறு துறைகளின் அறிக்கைகளே உறுதி செய்கின்றன.
தமிழகத்தின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அதிமுக தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜ உடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது. உண்மையான அதிமுக தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் டில்லி வரை சென்று மண்டியிட்டு பாஜ உடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.
போராட்டம்
நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான். முந்தைய அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின்திட்டம் , சொத்து வரி உள்ளிட்ட பாஜ அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழகம் அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
7வது முறை ஆட்சி
சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம். ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைத்துக் களத்தில் வெல்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.











