கேரள கன்னியாஸ்திரிகள் 2 பேருக்கும் ஜாமின்: 9 நாளுக்கு பின் விடுவித்தது என்.ஐ.ஏ., கோர்ட்

பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில், மூன்று இளம் பெண்களை வற்புறுத்தி மதமாற்றம் செய்ய முயன்றதாக கூறி கைதான கேரள கன்னியாஸ்திரிகள் இரண்டு பேருக்கும், என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி விடுவித்துள்ளது.

அதே சமயம் பாஸ்போர்ட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., அரசு ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்., ஆட்சியின்போது மதமாற்ற தடைச் சட்டம் அமலுக்கு வந்தது.

குற்றச்சாட்டு இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி துர்க் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த கேரள கன்னியாஸ்திரிகள் ப்ரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் மற்றும் உள்ளூரை சேர்ந்த சுகாமன் மாண்டவி என, மூன்று பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

நாராயண்பூரைச் சேர்ந்த மூன்று பழங்குடியின பெண்களை வற்புறுத்தி மதமாற்றம் செய்வதற்காக, கன்னியாஸ்திரிகள் அவர்களை கடத்தி வந்ததாக குற்றஞ்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக உள்ளூர் பஜ்ரங் தள அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கன்னியாஸ்திரிகள் மீது ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த விவகாரம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசாரின் நடவடிக்கையை சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டார்.

நிபந்தனை சத்தீஸ்கர் பா.ஜ., அரசின் இந்நடவடிக்கை, கேரள பா.ஜ.,வை வெகுவாக அதிர்ச்சியடைய வைத்தது. அவர்கள் கன்னியாஸ்திரிகளுக்காக ஆதரவு குரல் எழுப்பினர்.

மேலும், சத்தீஸ்கரில் இருந்து அவர்களை மீட்க, பா.ஜ., சார்பில் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டது.

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் சார்பிலும் கன்னியாஸ்திரிகளை சந்திக்க சத்தீஸ்கருக்கு பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜாமின் கோரி கன்னியாஸ்திரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி சிராஜுதீன் குரேஷி, இருவரையும் ஜாமினில் விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

மேலும், நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க, பாஸ்போர்ட்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.

இதையடுத்து, ஒன்பது நாள் சிறைவாசத்துக்கு பின் இரு கன்னியாஸ்திரிகள் உட்பட மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement